பிரபல தமிழ் பெண் செய்தி வாசிப்பாளர் கைது
பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரும், பாஜக கட்சியின் செயற்குழு உறுப்பினருமான சவுதா மணி கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் சவுதா மணி. இவர் கடந்த 2017ல் பா.ஜ.க கட்சியில் இணைந்த நிலையில் கட்சியின் செயற்குழு உறுப்பினராக செயல்பட்டு வந்தார்.
சவுதா மணி கடந்த ஜனவரி மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில், மதவாத வெறுப்பைத் தூண்டும் வகையில், ஒருவர் பேசிய காணொலியைப் பகிர்ந்து, கருத்தைப் பதிவிட்டிருந்தார்.
இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டு, 2 பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் சவுதாமணி மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால், அவரது மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், சென்னை சூளைமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் சவுதாமணியை நேற்று மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பொலிசார் கைது செய்தனர். இச்சம்பவத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரின் அறிக்கையில், சமூக ஊடகத்தில் யாரோ வெளியிட்ட பதிவை சவுதா மணி மற்றொருவருக்கு பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அதே சமயம் சவுதா மணி மீது சாட்டப்பட்ட குற்றத்திற்கு தகுந்த விளக்கம் கொடுத்த பிறகும் அவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.