கனடா கடற்பகுதியில் துயரம்... மீன்பிடி கப்பல் மூழ்கியதில் பலர் மாயம்
கிழக்கு கனடாவின் கடற்பகுதியில் ஸ்பெயின் நாட்டு மீன்பிடி படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 7 மீனவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை கனடா மற்றும் ஸ்பெயின் அதிகாரிகள் தற்போது உறுதி செய்துள்ளனர். குறித்த விபத்தில் சிக்கியவர்களில் 7 பேர்களின் சடலங்களை கைப்பற்றியுள்ளதாகவும், மூவரை உயிருடன் மீட்டுள்ளதாக கனேடிய மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நியூஃபவுண்ட்லாந்திலிருந்து கிழக்கே 250 கடல் மைல் தொலைவில் கப்பல் மூழ்கியதாகவும், அப்போது அதில் 24 மீனவர்கள் இருந்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, கடினமான வானிலைக்கு மத்தியில் எஞ்சிய 14 மீனவர்களைத் தேடும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விபத்துக்குள்ளான கப்பலில் 16 ஸ்பெயின் நாட்டவர்கள், ஐந்து பெருவியர்கள் மற்றும் மூன்று கானா நாட்டவர்கள் மீன்பிடி பணியில் ஈடுபட்டுள்ளனர் என ஸ்பெயினின் போக்குவரத்து அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது.
விபத்தில் சிக்குவதற்கு முன்னர் குறித்த கப்பலில் இருந்து உதவி கேட்டு கடலோரக காவல் படைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்து 5 மணி நேரத்திற்கு பின்னர் இன்னொரு ஸ்பெயின் நாட்டு மீன்பிடி கப்பல் அப்பகுதி வழியாக கடந்து சென்றதாகவும், அவர்களே உயிருக்கு போராடிய நிலையில் தத்தளித்த மூவரை மீட்டதாக, 7 சடலங்களையும் கரையில் சேர்த்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
உயிருடன் மீட்கப்பட்ட மீனவர்கள் மூவரையும் கனேடிய கடலோர காவல் படை ஹெலிகொப்டர் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதனிடையே மாயமானவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், கனேடிய நிர்வாகத்தால் ஹெலிகொப்டர், ராணுவ விமானம், கடலோர காவல் படைக்கான கப்பல் மற்றும் பல என்ணிக்கையிலான படகுகள் என அனைத்தும் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.