ஆளுநர் தொடர்பான விதிகளை தளர்த்துவதற்கான சிறப்பு தீர்மானம்: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்
மாநில ஆளுநர் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க கூடாது என்ற விதிமுறைகளை தளர்த்துவது தொடர்பான தீர்மானம் 144 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் இன்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது.
ஆளுநர் ரவி-யின் சர்ச்சை பேச்சுகள்
தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என் ரவி பொறுப்பேற்றத்தில் இருந்து பல்வேறு அரசியல் சர்ச்சைக் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
அந்த வகையில், நீட், மும்மொழி திட்டம், புதிய கல்விக் கொள்கை, சனாதனம், கால்டுவெல் திராவிடம், என பல்வேறு சர்ச்சை கருத்துக்களை ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்து வந்த நிலையில், தற்போது மசோதா நிலுவை, பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்த ஸ்டெர்லைட் போராட்டம், கூடங்குளம் போராட்டம் ஆகியவை குறித்தும் சர்ச்சை கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் இத்தகைய தொடர்ச்சியான செயலுக்கு தமிழக அரசு மற்றும் பல்வேறு கட்சிகளை சார்ந்த அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தீர்மானம் நிறைவேற்றம்
இந்நிலையில்,இன்று சட்டப்பேரவையில் ஆளுநர் தொடர்பாக விவாதிக்க கூடாது என்ற சட்டமன்றப் பேரவை விதி 92(vii)-யை தளர்த்துவதற்கான சிறப்பு தீர்மானம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவை முனைவரான துரைமுருகன் அவர்களால் கொண்டு வரப்பட்டது.
தீர்மானம் வெற்றியடைய சட்டப்பேரவையில் உள்ள மொத்த உறுப்பினர்களில் நான்கில் 3 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பதால் மூடப்பட்ட பேரவையில் தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் தமிழகத்தின் எதிர்கட்சியான அதிமுக வெளிநடப்பு செய்த நிலையில், வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்ய பாஜக உறுப்பினர்கள் சபாநாயகர் அப்பாவுவிடம் கோரிக்கை வைத்தனர்.
மேலும் பாஜக உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் சட்டப்பேரவைக்கு வராத நிலையில், 2 பாஜக உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இறுதியில் ஆளுநர் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க கூடாது என்ற விதிமுறைகளை தளர்த்துவதற்கான தீர்மானம் 144 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு கொண்டு வந்துள்ள தீர்மானம் இந்திய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.