கொரோனா பரவல் தொடர்பில் சீனாவில் மிகத் தீவிரமாக தேடப்படும் சுவிஸ் விஞ்ஞானி
கொரோனா பெருந்தொற்று உருவான விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையில் அமெரிக்கா அழுத்தம் அளிப்பதாக கூறி சுவிஸ் விஞ்ஞானி ஒருவர் வெளியிட்ட பேஸ்புக் பதிவு சீனாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விவகாரம் தொடர்பில் உண்மையை கண்டறியும் நோக்கில் சீனாவில் உள்ள சுவிஸ் தூதரகம், அந்த விஞ்ஞானியை தீவிரமாக தேடுவதாகவும் அறிவித்துள்ளது.
சுவிஸ் உயிரியலாளரான வில்சன் எட்வர்ட்ஸ் என்பவர் ஜூலை 24ம் திகதி தமது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட கருத்தானது சீனா முழுவதும் அதிர்வலைகளை கிளப்பியது.
அதில் அவர், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு காரணம் என சீனாவை குற்றம் சாட்ட அமெரிக்கா உலக சுகாதார அமைப்பு மீது அழுத்தம் கொடுத்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி கொரோனா விவகாரம் அரசியலாக்கும் முயற்சியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது ஒரு விஞ்ஞானியாக கவலை அளிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா அளிக்கும் இந்த மறைமுக அழுத்தம் விஞ்ஞானிகளின் உழைப்பை சேதப்படுத்துவதாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதை கெட்டியாகப்பிடித்துக் கொண்ட சீனா, தங்கள் நாட்டுக்கு எதிராக அமெரிக்கா தேவையற்ற பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாகவும், சுவிஸ் விஞ்ஞானியின் கூற்றுதான் அதற்கு சான்று என குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் சீனாவில் உள்ள சுவிஸ் தூதரகம் முன்னெடுத்த தீவிர விசாரணையில் வில்சன் எட்வர்ட்ஸ் என்ற ஒருவரே இல்லை எனவும், அவர் தொடர்பிலான பேஸ்புக் பக்கம் மிக சமீபத்தில் உருவாக்கப்பட்டுள்ளதையும் கண்டுபிடித்துள்ளது.
இருப்பினும் வில்சன் எட்வர்ட்ஸ் தொடர்பில் சுவிஸ் தூதரகம் பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளதுடன், அவர் குறித்த தகவல்களை பகிரவும் கேட்டுக்கொண்டுள்ளது.
வில்சன் எட்வர்ட்ஸ் கூறியதாக பரவும் தகவல் போலியாக இருப்பின், சீனா நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை முன்னெடுக்கவும் கோரிக்கை வைத்துள்ளது.