இந்த தடுப்பூசி குறித்து போலியான செய்திகள் பரப்பினால் பணம் கிடைக்கும்... பிரான்சில் தீயாய் பரவும் ஒரு செய்தி
பைசர் நிறுவன தயாரிப்பான கொரோனா தடுப்பூசி குறித்து எதிர்மறையான செய்திகளைப் பரப்பினால் பணம் கிடைக்கும் என சமூக ஊடக பிரபலங்கள் பலருக்கும் செய்திகள் வருவதால் பிரான்சில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் உள்ளதாக கூறிக்கொள்ளும் ஒரு ஏஜன்சி, தங்களை தொடர்புகொண்டதாகவும், தங்களைக் பங்காளர்களாக சேர்த்துக்கொள்வதாக அவர்கள் கூறியதாகவும் சம்பந்தப்பட்ட சமூக ஊடக பிரபலங்கள் தெரிவித்துள்ளார்கள்.
யூடியூபில் 1.17 மில்லியன் பின்தொடர்வோரைக் கொண்டவரான Léo Grasset என்பவர் கூறும்போது, தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாத ஒருவர் தன்னைத் தொடர்புகொண்டதாகவும், பைசர் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களிடையே காணப்படும் இறப்பு வீதம், ஆஸ்ட்ராசெனகாவால் ஏற்படும் இறப்பு வீதத்தைவிட மூன்று மடங்கு அதிகமாக இருப்பதாக ஒரு போலியான செய்தியை பரப்புமாறும் அதற்கு தக்க சன்மானம் கிடைக்கும் என்றும் தனக்கு ஆசை காட்டப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
C'est étrange.
— Léo Grasset (@dirtybiology) May 24, 2021
J'ai reçu une proposition de partenariat qui consiste à déglinguer le vaccin Pfizer en vidéo. Budget colossal, client qui veut rester incognito et il faut cacher la sponso.
Éthique/20. Si vous voyez des vidéos là dessus vous saurez que c'est une opé, du coup. pic.twitter.com/sl3ur9QuSu
இதேபோல், மருத்துவம் மற்றும் அறிவியல் தொடர்பான துறை பின்னணியில் செயல்படும் பல பிரெஞ்சு சமூக ஊடக பிரபலங்களுக்கும் இதே ஆஃபர் வந்திருக்கிறது.
இது குறித்து பேசிய பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சரான Olivier Véran, இந்த ஆஃபர் பிரான்சிலிருந்து வருகிறதா அல்லது வெளிநாட்டிலிருந்து வருகிறதா எங்கிருந்து வருகிறதென்று தெரியவில்லை, அது ஆபத்தான ஒன்றாக காணப்படுகிறது என்று கூறியுள்ளார்.
பிரான்சில் அதிக அளவில் வழங்கப்படும் தடுப்பூசி அமெரிக்க மற்றும் ஜேர்மன் கூட்டுத்தயாரிப்பான பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிதான். அதே நேரத்தில், பிரித்தானிய ஸ்வீடன் கூட்டுத்தயாரிப்பான ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியும் பிரான்சில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஏப்ரலில், ரஷ்ய மற்றும் சீன ஊடகங்கள், மேற்கத்திய நாடுகளில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் குறித்து போலியான செய்திகளைப் பரப்பி, அவற்றின் மீது மக்கள் நம்பிக்கையை இழக்கச் செய்ய முயன்றதாக ஐரோப்பிய ஒன்றிய அறிக்கை ஒன்று தெரிவித்திருந்ததும், அதற்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.