ரஷ்யாவுக்கு உளவு பார்த்த அமெரிக்க ராணுவ வீரர்: பிரித்தானியாவில் வைத்து கைது செய்த அதிகாரிகள்
Spying for Russia US soldier detained in UK: ரஷ்யாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் அமெரிக்க மூத்த ராணுவ அதிகாரியை பிரித்தானியா கைது செய்துள்ளது.
ரஷ்யாவிற்காக உளவு பார்த்த அமெரிக்க ராணுவ வீரர்
ரஷ்யாவிற்காக உளவு பார்த்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில் குளோஸ்டர்(Gloucester) பகுதியில் பிரித்தானிய அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 41 வயதான அமெரிக்காவின் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக செவ்வாய்க்கிழமை லண்டன் பெருநகர் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையை பிரித்தானியாவின் சட்ட அமலாக்கத்துறையினர், உளவுத்துறை அமைப்புகள் மற்றும் அமெரிக்க ராணுவம், கூட்டாட்சி அமைப்புகளுடன் இணைந்து நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்பு சட்டங்களை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ அதிகாரி, தற்போது கைது செய்யப்பட்டு லண்டன் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் பிரித்தானிய அதிகாரிகளின் நெருக்கமான ஒத்துழைப்பு காரணமாகவே இந்த முக்கியமான கைது மற்றும் விசாரணை சாத்தியமானதாக லண்டனின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் மூத்த தேசிய ஒருங்கிணைப்பாளர் விக்கி எவன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் குற்றத்தின் தீவிரத்தன்மை காரணமாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக வாஷிங்டனில் பேசிய FBI இயக்குநர் காஷ் படேல், பிரித்தானிய பாதுகாப்பு மற்றும் காவல்துறையினருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார்.