கனேடிய மாகாணம் ஒன்றில் நதியிலிருந்து மீட்கப்பட்டுள்ள இளைஞரின் உடல்: அவர் யார்?
கியூபெக் மாகாணத்திலுள்ள நதி ஒன்றிருந்து உயிரற்ற உடல் ஒன்று மீட்கப்பட்டுள்ள நிலையில், அது கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போன மொன்றியலைச் சேர்ந்த இளைஞருடைய உடலாக இருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.
Natashquan நதியில் உயிரற்ற உடல் ஒன்றை நேற்று மதியம் கியூபெக் பொலிசார் கண்டெடுத்தார்கள்.
இதற்கிடையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில், 22 வயது இளைஞர் ஒருவர் Natashquan நதிக்குள் அடித்துச் செல்லப்பட்ட தனது படகைக் காப்பாற்ற முயன்றிருக்கிறார். ஆனால், தண்ணீரின் வேகம் அதிகமாக இருக்கவே அடித்துச் செல்லப்பட்ட படகைப் பிடித்துக்கொள்ள முயன்ற அவரும் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
அவருடன் இருந்த மற்றவர்கள் அவரை காப்பாற்ற முயன்ற நிலையில், அவர் தண்ணீரில் மூழ்கிவிடவே, தங்களுக்கும் அதே நிலை ஏற்படலாம் என்று அஞ்சி அவர்கள் நதியில் இறங்குவதைத் தவிர்த்திருக்கிறார்கள்.
படகுகள், ஹெலிகொப்டர் மூலம் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியாததால் தேடுதல் வேட்டை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள உடல், வெள்ளியன்று தண்ணீரில் விழுந்த அந்த இளைஞருடையதாக இருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.