பாகிஸ்தானை மிரட்டிய சண்டிமலின் ஆட்டம்! இலங்கை 315 ஓட்டங்கள் குவிப்பு
காலே இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி 315 ஓட்டங்கள் குவித்துள்ளது.
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் காலேவில் இன்று தொடங்கியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
கேப்டன் கருணாரத்னே - ஒஷாட பெர்னாண்டோ இருவரும் சிறப்பான தொடக்கம் அமைத்தனர். அதிரடி காட்டிய பெர்னாண்டோ 70 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்கள் விளாசினார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய குசால் மெண்டிஸ் 3 ஓட்டங்களில் இருக்கும்போது துரதிர்ஷ்டவசமாக ரன்-அவுட் ஆனார். நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய கருணாரத்னே 40 ஓட்டங்களில் யாசிர் ஷா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
தனது நூறாவது போட்டியில் களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் 42 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். அதன் பின்னர் தொடர்ச்சியாக அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சண்டிமல், இன்றைய இன்னிங்சிலும் அரைசதம் அடித்தார். சிக்ஸர், பவுண்டரிகளை பறக்கவிட்ட அவரது ஆட்டத்தின் மூலம் இலங்கை அணி 250 ஓட்டங்களை கடந்தது.
Yet another brilliance from Dinesh Chandimal! ?#SLvPAK pic.twitter.com/EsDH7RW6C4
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) July 24, 2022
அணியின் ஸ்கோர் 258 ஓட்டங்களாக இருந்தபோது சண்டிமல் 80 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் தனஞ்ஜய டி சில்வா, திக்வெல்ல இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்தனர். டி சில்வா 33 ஓட்டங்கள் எடுத்து நசீம் ஷா பந்துவீச்சில் வெளியேறினார்.
இலங்கை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 315 ஓட்டங்கள் குவித்துள்ளது.
திக்வெல்ல 42 ஓட்டங்களுடனும், துனித் 6 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் முகமது நவாஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.