24 வருட சாதனையை முறியடித்த இலங்கை கேப்டன் திமுத் கருணரத்ன!
இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜூன ரணத்துங்காவின் 24 ஆண்டுகால சாதனையை இலங்கை அணியின் தற்போதைய கேப்டன் திமுத் கருணரத்ன முறியடித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2-1, ஒரு நாள் தொடரை 3-0 என இழந்தது.
சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமனில் முடிந்தது. தொடரின் இரண்டு போட்டிகளும் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கை டெஸ்ட் அணி கேப்டன் திமுத் கருணரத்ன, 2வது டெஸ்ட் போட்டியின் 4 இன்னிங்ஸில் 75 ஓட்டங்கள் எடுத்து அவுட்டானார். இதன் மூலம் வெளிநாட்டில் டெஸ்ட் போட்டியின் 4வது இன்னிங்ஸில் இலங்கை கேப்டனாக அதிகபட்ச ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார் திமுத் கருணரத்ன.
இதற்கு முன் 1997 ஆம் ஆண்டு இதே மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜூன ரணத்துங்க ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது.
சுமார் 24 வருடங்களுக்கு பிறகு அர்ஜூன ரணத்துங்காவின் சாதனையை இலங்கை அணியின் தற்போதைய கேப்டன் திமுத் கருணரத்ன முறியடித்துள்ளார்.
