இலங்கை அணி வீரர்கள் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் அர்ப்பணிப்புடன் விளையாடவில்லையா? குற்றச்சாட்டுக்கு கொடுத்த பதிலடி
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் மறுத்துள்ளது.
தென்னாபிரிக்கா அணி இலங்கையில் சுற்றுபயணம் செய்து விளையாடிய நிலையில் டி-20 தொடரின்போது இலங்கை அணி வீரர்கள் சிலர் முழுமையான அர்ப்பணிப்புடன் போட்டிகளில் விளையாடவில்லை என சில ஊடக அறிக்கைகளை முன்வைத்தன.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள, இலங்கை கிரிக்கெட் நிர்வாகம், தென்னாபிரிக்காவுக்கு எதிராக இலங்கை வென்ற ஒருநாள் தொடரில் விளையாடிய அதே குழுவினர் தான் டி-20 தொடரிலும் பங்கெடுத்தனர்.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது மட்டுமல்லாமல், ஐ.சி.சி. ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ண சூப்பர் லீக் தரவரிசைப் பட்டியலில் சிறப்பான புள்ளிகளைப் பெற்றது இலங்கை அணி.
எனவே ஐ.சி.சி. ஆண்கள் டி-20 உலகக் கிண்ணம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இது போன்ற தவறான அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.
ஊடக ஒழுக்கத்திற்கு மதிப்பளித்து சரியான செய்திகள் வௌியிடப்படாவிட்டால், உலகக் கிண்ண தொடரில் கலந்துகொள்ளவுள்ள அணியின் மனோதிடம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.