தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இலங்கை கிரிக்கெட் அணி! வேதனையடைந்த ரசிகர்கள் செய்த அதிரடி செயல்
மிக மோசமாக விளையாடும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்! வேதனையடைந்த ரசிகர்கள் செய்த அதிரடி செயல் இலங்கை கிரிக்கெட் அணி தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் தோல்வியடைந்து வரும் நிலையில் ரசிகர்கள், அன்பாலோ செய்யும் நூதன போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
1990-ம் ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்தில், ஒரு சராசரி அணியாக இருந்த இலங்கை அணி, ரணதுங்கா, அரவிந்தா டி சில்வா, முரளிதரன், சங்ககாரா, ஜெயவர்தனே, தில்ஷன் என மிகச்சிறந்த வீரர்களின் வருகையால் மகாபலம் பொருந்தியதாக மாறத் தொடங்கியது.
போட்டிகளை, தொடர்களை, பின் கோப்பைகளை என வெற்றி மேல் வெற்றியைக் குவிக்கத் தொடங்கியது. 1996-ல் வென்ற உலகக் கோப்பை, சர்வதேசக் கிரிக்கெட் அரங்கில் அவர்களை மேலே உயர்த்தியது. இன்னும் சொல்லப் போனால், கிரிக்கெட் இலங்கைக்கான முக்கிய அடையாளமாக மாறியது.
2002 சாம்பியன்ஸ் டிராபிக்கான இணை சாம்பியன்களான பின், பலமுறை, ஐசிசி நடத்தும் தொடர்களில், இறுதிப் போட்டிக்கோ, குறைந்தபட்சம் அரையிறுதிக்கோ, காலிறுதிக்கோ முன்னேறுவதென சிறப்பாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தது இலங்கை.
அதன் உச்சகட்டமாக, 2014-ல் டி20 உலகக் கோப்பையை இந்தியாவை வீழ்த்தி வென்றது. ஆனால், அந்த உச்சத்திற்குப் பிறகு, கிடுகிடுவென பள்ளத்தில் சரிந்து விழுந்திருக்கிறது இலங்கை கிரிக்கெட்.
முக்கியமாக சங்ககாரா, தில்ஷன், ஜெயவர்தனே, முரளிதரன் போன்ற ஜாம்பவான்கள் ஓய்வு பெற்ற பின்னர் இலங்கை அணியால் பழையபடி சாதிக்க முடியவில்லை.
இதன் பலனாக, 2018-ல் இருந்து விளையாடிய பத்து டி20 தொடர்களில், ஒன்றே ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது இலங்கை. தற்போது, இங்கிலாந்துக்கு எதிரான தொடரையும் 3-0 என இழந்துள்ளது இலங்கை. இது ரசிகர்களின் மனதை, வேதனையில் ஆழ்த்தியிருந்தது.
அதன் காரணமாக தங்களது கடுமையான எதிர்ப்பையும், கோபத்தையும் பதிவு செய்யும் விதமாக போட்டியில் மோசமாக விளையாடிய குசல் மென்டிஸ், தனுஷ்கா குணதிலகா உள்ளிட்ட இலங்கை வீரர்களுடைய டுவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகக் கணக்குகளை அன்பாலோ செய்யத் தொடங்கியுள்ளனர்.
அன்பாலோ கிரிக்கெட்டர்ஸ் என்னும் ஹேஷ்டேகின் வாயிலாக, அக்கருத்தை பரவவும் செய்துள்ளனர்.