தமிழ் மக்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் அனுர - வெளியிடப்பட்ட விஞ்ஞாபனம்!
வடக்கு மற்றும் கிழக்கு வாழ் மக்களின் நீண்ட கால பிரச்சனைக்கு புதிய தீர்வு திட்டமொன்றை முன்வைப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்த போதிலும், இன்று வெளியிடப்பட்ட கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அது குறித்து எதுவும் உள்ளடக்கப்படவில்லை.
வடமாகணத்துக்கான பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட உறுதிகள் தொடர்பில் இன்றைய தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் பேசப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட போதிலும், தமிழ் மக்களை ஏமாற்றும் வகையில் இன்றைய நிகழ்வு இடம்பெற்றுள்ளமை உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியுள்ள கட்சித் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் வளமான நாடு, அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தலவத்துகொட பகுதியில் உள்ள விடுதியொன்றில் இடம்பெற்ற இந்த விஞ்ஞான வெளியீட்டு நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட கட்சியின் பல உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதன் போது, மும்மொழியிலும் வெளியிடப்பட்ட கட்சியின் தேர்தல் விஞ்ஞானத்தை, கண்டி மாவட்ட நிறைவேற்று குழு உறுப்பினரான கலாநிதி. பி.பி. சிவப்பிரகாசம் தமிழில் மக்கள் மயப்படுத்தியுள்ளார்.
பி.பி. சிவப்பிரகாசம்
தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனம் மக்களுக்கும் தேசிய மக்கள் சக்திக்குமிடையிலான உடன்படிக்கை என சிவப்பிரகாசம் கூறியுள்ளார்.
சமத்துவம், ஒப்புரவு, சட்டத்தின் ஆட்சி, அனைவரையும் ஒருங்கிணைத்தல், ஜனநாயக பண்புகள், பொருளாதார ஜனநாயம், பிரஜைகள் சார்ந்த ஆட்சி முறை, சமூக நீதி, இலங்கை கட்டியெழுப்ப கூடிய விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் ஆய்வும் அபிவிருத்தியும் என்பவற்றை உள்ளடக்கி தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கப்பட்டு, புதிய அரசியல் யாப்பு அறிமுகப்படுத்தப்படுமென அவர் கூறியுள்ளார்.
பாகுபட்டுக்கு எதிரான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படத்தல், அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கைளை 25ஆக குறைத்தல், நாடளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் வாகன அனுமதிகள் நிறுத்தல் மற்றும் தமிழ்-சிங்கள மொழி உரிமை சமத்துவத்துடன் பேணல் போன்ற நடவடிக்கைகள் தமது ஆட்சியின் போது முன்னெடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல், நிதி மோசடி மற்றும் இலஞ்ச ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் உள்ளிட்ட தரப்பினர் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் எனவும் குறித்த விடயம் தமது கட்சின் கொள்கை பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் சிவப்பிரகாசம் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அனுரகுமார திஸாநாயக்க கூறியபோது,
இந்த நிலையில், ஸ்ரீலங்கா அரசாங்கத்திலும், அரச நிறுவனங்களிலும் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் போது தமிழ் மொழி பரந்தளவில் பயன்படுத்தப்படுமென அந்த கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.
தங்கள் சொந்த மொழிகளில் கோரிக்கைகளையும் கடிதங்களையும் அரச நிறுவனங்களில் முன்வைக்க தமிழ் மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமென்பதோடு, அவற்றுக்கான பதிலும் தமிழ் மொழியிலேயே குறித்த தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்படுமென கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியிட்டு நிகழ்வின் போது உரையாற்றிய அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.
இலங்கையில் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்டு மக்கள் நீதியின் மீதுஅதிக நம்பிக்கை கொள்ளும் காலம் விரைவில் உருவாக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தொடர்ந்தும் ஒருவருக்கு எதிரான அரசியல் முறை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இவ்வாறான பின்னணியில் நாட்டில் ஒருபோதும் சமாதானத்தை ஏற்படுத்த முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அரசியல்முறையை மாற்றி, தேசிய மக்கள் சக்தி சமாதானத்துடனான ஆட்சி முறையை இலங்கையில் முன்னெடுக்குமென அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.
இலங்கையில் உள்ள அனைவரும் தத்தமது மதங்களை சுதந்திரமாக பின்பற்றக் கூடிய சுதந்திரம் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் போது மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படுமெனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும், விமர்சனத்துக்குள்ளாகியுள்ள இலங்கையின் ஆட்சி முறையை மாற்றி, அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு ஆட்சி முறையை இலங்கையில் ஸ்தாபிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஏனைய அரசியல் கட்சிகளால் வெளியிடப்படும் தேர்தல் விஞ்ஞாபனத்தை போன்று வெறுமனே ஒரு கடதாசியாக தமது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் அமையாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக இலங்கை மக்களால் எதிர்ப்பார்க்கப்பட்ட விடயங்களையும் பல்வேறு தரப்பினரின் பரிந்துரைகளையும் உள்ளடக்கி, தமது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் குறித்து இதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |