இலங்கையில் உணவு பஞ்சம் மேலும் மோசமாக வாய்ப்பு!
இலங்கையில் உணவு பஞ்சம் மோசமாக வாய்ப்புள்ளது என ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, உலக உணவு திட்ட அமைப்பு ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த யூன், யூலை மாதங்களில் இலங்கையின் 25 மாவட்டங்களில் வேளாண்மை உற்பத்தி குறித்து அறியவும், உணவு பாதுகாப்பு சூழலை மதிப்பிடவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இரு மோசமான அறுவடை பருவங்களால் அந்நாட்டின் 50 சதவிகித வேளாண்மை வளர்ச்சி வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதனாலும், அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாகவும் உணவு தானியங்கள் இறக்குமதி சரிந்துள்ளது.
தற்போதைய சூழலில் சுமார் 63 லட்சம் பேர் உணவு பஞ்சத்தை எதிர்கொண்டு வருகின்றனர், இந்த நிலை நீடித்தால் நிலைமை மேலும் மோசமாகலாம், குறிப்பாக 2023 பிப்ரவரி வரை நிலை மோசமாக கூடும்.
இதனால் சிறு விவசாயிகளை இலக்காக கொண்டு வாழ்வாதார உதவிகளை வழங்க வேண்டும், உற்பத்தி திறனை மேம்படுத்தினால் மட்டுமே நாட்டில் வேளாண்மை மீண்டெழ உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.