இலங்கை ஜனாதிபதி தேர்தல்: பாராட்டு தெரிவித்துள்ள கண்காணிப்பு குழுக்கள்
நேற்றைய தினம் இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் இடையூறுகளோ வன்முறைச் சம்பவங்களோ இன்றி அமைதியான முறையில்,நடைபெற்றதாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில், தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிக்க உதவிய தேர்தல் ஆணையகம் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை அமைப்பின் தகவலின் பிரகாரம், நேற்று 108 முறைப்பாடுகள் கிடைத்துள்ள போதிலும் பாரிய வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை.
அறிக்கை
அதேவேளை, இந்த தேர்தல் அமைதியான முறையில் நடத்தப்பட்டதாக ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலவாய கண்காணிப்பாளர் குழுவின் மக்கள் தொடர்பு மற்றும் ஈடுபாடு அதிகாரி Temitope Kalejaiye விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை ஜனாதிபதி தேர்தல் குறித்த விரிவான கண்ணோட்டம் நாளை திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.