மேற்கிந்திய தீவிடம் மீண்டும் தோல்வி! ஒருநாள் தொடரையும் இழந்தது இலங்கை: கடைசி ஓவரில் சொதப்பல்
மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இலங்கை அணி, மேற்கிந்திய தீவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கிடையே நடைபெற்று முடிந்த டி20 தொடரை மேற்கிந்திய தீவு அணி வென்றது.
இதையடுத்து இரு அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் போட்டியில் மேற்கிந்திய தீவு அணி வெற்றி பெற்ற நிலையில், நேற்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
அதன் படி முதலில் விளையாடிய இலங்கை அணிக்கு துவக்க வீரரான குணதிலகா அபாரமாக விளையாடி 96 ஓட்டங்கள் குவிக்க, அதன் பின் வந்த வீரர்கள் சொதப்பினாலும், கடைசி கட்டத்தில் தினேஷ் சண்டிமலா சிறப்பாக விளையாடியதால் அவர் 71 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்க, இறுதியாக இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 273 ஓட்டங்கள் எடுத்தது.
இதையடுத்து 274 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவு அணியில் துவக்க வீரரான எவின் லிவிஸ் மற்றும் ஷாய் ஹோப் சிறப்பான துவக்கம் கொடுத்தனர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 192 ஓட்டங்கள் குவிக்க, எவின் லிவிஸ் சதம் அடித்து 103 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து ஷாய் ஹோப்பும் 84 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஆட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. ஏனெனில் டேவைன் பிராவோ 10 ஒட்டங்களிலும், அதிரடி வீரர் பொல்லார்ட் 15 ஓட்டங்களிலும் வெளியேறியதால், கடைசி ஓவரில் மேற்கிந்திய தீவு அணியின் வெற்றிக்கு 9 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
கடைசி ஓவரை நுவான் பிரதீப் வீசினார். முதல் பந்தில் ஓட்டம் எதுவும் எடுக்காததால், 5 பந்துக்கு 9 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
ஆனால் அடுத்தடுத்து இரண்டு பந்துகளில் பவுண்டரி, நான்காவது பந்தில் ஒரு ஓட்டம் என அசால்ட்டாக நிக்கோலஸ் பூரான் அடிக்க மேற்கிந்திய தீவு அணி 49.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 274 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த பூரான் 35 ஓட்டங்கள் குவித்தார். இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்திய தீவு அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 0-2 என்று கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே டி20 தொடரையும் மேற்கிந்திய தீவு அணி கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.



