இலங்கையில் விபரீதமாக முடிந்த காதலர்களின் முதல் சந்திப்பு: தீயில் அழிந்த 3 ஏக்கர் காட்டுப் பகுதி
இலங்கையின் குருநாகல் பகுதியில் உள்ள அத்துகல காட்டுக்கு தீ வைத்த சம்பவத்தில் காதல் ஜோடி ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காதல் ஜோடி கைது
இலங்கையில் குருநாகல் காட்டுப்பகுதியில் உள்ள புத்தர் சிலையை தரிசிப்பதற்காக காதல் ஜோடி ஒன்று அதுகல மலை உச்சிக்கு நேற்று காலை சென்றுள்ளனர்.
இந்த காதல் ஜோடிக்கு இது முதல் சந்திப்பு என கூறப்படும் நிலையில், இளைஞனின் சட்டை பையில் தீப்பெட்டி இருப்பதை பார்த்த இளம்பெண் அது குறித்து கேட்டுள்ளார்.
மேலும் அதிலிருந்த இரண்டு தீ குச்சிகளை கொளுத்தி இளம்பெண் காட்டுப் பகுதிக்குள் வீசியதாக கூறப்படுகிறது. இதனால் அதுகல மலையின் காட்டுப் பகுதியில் தீ பரவியதை தொடர்ந்து காதல் ஜோடி அங்கிருந்து தப்பியோடியுள்ளது.
இதையடுத்து காதல் ஜோடியை மடக்கி பிடித்த பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் 24 மற்றும் 20 வயதுடைய மாத்தளை மற்றும் மஹவ பகுதிகளை சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
நாசமடைந்த 3 ஏக்கர்
மாநகர சபை ஊழியர்களின் உதவியுடன் பொலிஸார் காட்டுத் தீயை போராடி அணைத்தனர்.
இருப்பினும் இந்த காட்டுத்தீ விபத்தில் கிட்டத்தட்ட 3 ஏக்கர் பகுதி அழிவடைந்ததாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.