இலங்கை சிறைச்சாலையில் வெடித்த கலவரம்: 26 பேர் உயிரிழப்பு: 700 கைதிகள் இடமாற்றம்
இலங்கையின் நீர்கொழும்பு சிறைச்சாலையில் வெடித்த வன்முறையில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிறைக்குள் வெடித்த வன்முறை
நேற்று(05/07/26) இலங்கையின் கொழும்பு புறநகர் பகுதியில் அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரண்டு குழுக்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது கைதிகள் சிறைச்சாலையின் மேற்கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டது, இருப்பினும் அதன் பின்னர் மோதல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 2 வது நாளாக இன்று மீண்டும் நீர்கொழும்பு சிறைச்சாலையில் மிகப்பெரிய கலவரம் வெடித்துள்ளது.
விசாரணைக் காவலில் இருந்த ஒரு குழு கைதிகளுக்கும், தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மற்றொரு குழு கைதிகளுக்கும் இடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் இதுவரை 26 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதில் 7 சிறை அதிகாரிகளும் 19 கைதிகளும் உயிரிழந்துள்ளதாக நீதி அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
உயிரிழந்த அதிகாரிகளில் ஒரு சிறைக்காவலர், ஒரு மூத்த சிறை அதிகாரி மற்றும் பல சிறை அதிகாரிகள் அடங்கிய குழு ஆகியோர் அடங்குவர்.
இன்னும் 23 சிறை அதிகாரிகள் மற்றும் 54 கைதிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும், படுகாயமைடந்து 18 பேர் மேல் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறையில் இருந்த சிசிடிவி கருவிகளையும் உடல் ஸ்கேனர்களையும் கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள் அழித்துவிட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

700 கைதிகள் இடமாற்றம்
கலவரத்தை தொடர்ந்து நீர்கொழும்பு சிறையில் இருந்து சுமார் 700 கைதிகளை அங்குனகொலபெலஸ்ஸ, போகம்பரா, அனுராதபுரம், பொலன்னறுவ மற்றும் குருவிட்ட சிறைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.
நிலைமையை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்த இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |