இலங்கையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றதும் தீவிரமடையும் போராட்டம்! முக்கிய தகவல்
இலங்கையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ள நிலையில் நாட்டில் போராட்டம் இன்னும் தீவிரமடைந்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். மக்கள் போராட்டங்களை தொடர்ந்து அமைச்சர்கள் அனைவரும் பதவியை ராஜினாமா செய்தனர்.
தற்காலிக அமைச்சரவை
இதனை தொடர்ந்து முழு அமைச்சரவையும் பதவி விலகிய சில மணி நேரத்துக்குள் தற்காலிக அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி பசில் ராஜபக்சவுக்கு பதிலாக புதிய நிதி அமைச்சராக அலி சப்ரியும், வெளிவிவகார அமைச்சராக ஜி.எல்.பீரிஸ் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
கல்வி அமைச்சராக தினேஸ் குணவர்தனவும், நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீவிரமடையும் மக்கள் போராட்டம்
புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ள நிலையில் போராட்டமானது தீவிரமடைந்துள்ளது. கொழும்பு சுதந்திர சதுக்க பகுதியிலும் பெருந்திரளான மக்கள் ஒன்றிணைந்து அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தங்காலையில் உள்ள கார்ல்ட்டன் இல்லத்தில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. கார்ல்ட்டன் இல்லத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய பொது மக்கள் பாரிய போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் கொழும்பின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.