வெளிநாடொன்றின் எண்ணெய்க் கடனை தேயிலையால் திருப்பிச் செலுத்தும் இலங்கை
பண நெருக்கடியில் உள்ள இலங்கை, ஈரானுக்கான எண்ணெய்க் கடன்களை ஓரளவு திருப்பிச் செலுத்துவதற்காக 20 மில்லியன் டொலர் மதிப்புள்ள தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
தேயிலை ஈரானுக்கு ஏற்றுமதி
ஈரானுக்கு 251 மில்லியன் டொலர் அளவுக்கு எண்ணெய்க் கடனை இலங்கை திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது. இந்த நிலையில், இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில்,
பண்டமாற்று வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இதுவரை 20 மில்லியன் டொலர் மதிப்பிலான தேயிலை ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேயிலைக்கு எண்ணெய் என்ற இந்த ஒப்பந்தமானது 2021 டிசம்பர் மாதம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்றுமதி தாமதமானது. அத்துடன் இலங்கையுடனான இந்த பண்டமாற்று ஒப்பந்தமானது பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்ட ஈரானுக்கு உயர் ரக தேயிலை இறக்குமதிக்கு பணம் செலுத்துவதற்கு தங்கள் கையிருப்பை பயன்படுத்துவதையும் தவிர்க்க அனுமதிக்கிறது.
மேலும், இறக்குமதி கட்டணத்தை டொலரில் செலுத்துவதற்கு பதிலாக இலங்கை தேயிலையை பயன்படுத்தவும் அனுமதிக்கிறது. கடந்த 2016ல் ஈரானின் தேயிலைத் தேவையில் சரிபாதி அளவுக்கு இலங்கையின் தேயிலை இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் சமீப ஆண்டுகளாக அந்த அளவு சரிவடைந்து வருவதாகவே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |