இலங்கை 500! கடைசி வரை களத்தில் நின்ற மேத்யூஸ்..தடுமாறும் வங்கதேசம்
டாக்கா டெஸ்டில் மேத்யூஸ் மற்றும் சண்டிமல் ஆகியோரின் உதவியுடன் இலங்கை அணி 506 ஓட்டங்கள் குவித்தது.
வங்கதேச அணி தனது முதல் இன்னிங்சில் 365 ஓட்டங்கள் எடுத்த நிலையில், அடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் பெர்னாண்டோ, கருணரத்னே, தனஞ்செய டி சில்வா ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த மேத்யூஸ்-சண்டிமல் இணை 199 ஓட்டங்கள் சேர்த்தது. சில்வா 124 ஓட்டங்களில் இருந்தபோது, ஹோசைன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த இலங்கை வீரர்களை ஷகிப் அல் ஹசன் மற்றும் ஹோசைன் இருவரும் அடுத்தது வெளியே அனுப்பினர்.
Photo Credit: Getty Images
எனினும் ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் மேத்யூஸ் நிலைத்து நின்று ஆடினார். இலங்கையின் கடைசி விக்கெட்டாக அசிதா பெர்னாண்டோ ரன் அவுட் ஆக, இலங்கை அணி 506 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. கடைசி வரை களத்தில் இருந்த மேத்யூஸ் 145 ஓட்டங்கள் எடுத்தார். வங்கதேச அணி தரப்பில் ஷகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளையும், எபடோட் ஹோசைன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Photo Credit: AFP/Getty Images
அதனைத் தொடர்ந்து வங்கதேச அணி தனது இரண்டாவது இன்னிங்சை துவங்கியது. தொடக்க வீரர் தமிம் இக்பாலை ரன் எடுக்கவிடாமல் பெர்னாண்டோ அவுட்டாக்கினார். அத்துடன் மற்றோரு தொடக்க வீரர் ஹசன் ஜோய்யையும் வெளியேற்றினார் பெர்னாண்டோ.
அதன் பின்னர் வந்த ஹோசைன் ஷாண்டோ ரன் அவுட் ஆக, கேப்டன் மொமினுள் ஹக் 0 ரன்னில் நடையை காட்டினார்.
நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 4 விக்கெட் இழப்புக்கு 34 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ரஹிம் 14 ஓட்டங்களுடனும், லித்தான் தாஸ் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
Photo Credit: AFP
தற்போது வரை வங்கதேச அணி 107 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளதால், கடைசி நாளான நாளை எஞ்சிய விக்கெட்டுகளை இலங்கை வீழ்த்தினால் இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளது.