இலங்கையில் கின்னஸ் சாதனை படைத்த இரத்தினக்கல்: வெளியான உண்மை
இலங்கையில் கிடைத்த உலகிலேயே பாரிய இரத்தினக்கலின் மதிப்பு குறிப்பிடப்பட்டதை விட பன்மடங்கு குறைவானது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் பாரிய இரத்தினக்கல்
உலகின் பாரிய நட்சத்திர நீலமாணிக்கம் என அழைக்கப்பட்ட, ரத்தினபுரியில் கிடைத்த இரத்தினக்கல் தொடர்பில் அதிர்ச்சி உண்மை தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு ரத்தினபுரியின் கஹவத்தை பகுதியில் கிடைத்த இந்த இரத்தினக்கல் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புக்கொண்டது எனக் கூறப்பட்டது.
ஆனால், இலங்கை நாடாளுமன்றத்தின் கோப் குழுவானது, இதன் மதிப்பு 10,000 அமெரிக்க டொலர்கள் மட்டுமே என்று கூறியுள்ளது. முன்பு, இந்த கல்லானது 510 கிலோகிராம் எடையுடையது எனவும், அதனை துண்டுகளாக பிரிக்க முடியாது எனவும் அதிகாரிகள் கூறியிருந்தனர்.
மேலும் உலகிலேயே பாரிய இரத்தினக்கல் கொத்தணி என்ற கின்னஸ் சாதனையையும் இந்தக் கல் பெற்றுக் கொண்டுள்ளது எனவும் குறிப்பிட்டனர்.
அதிர்ச்சி உண்மை
தற்போது, இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் அதிகாரிகள் கோப் குழு முன்னிலைக்கு அழைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கோப் குழுவின் உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறுகையில், 'இந்த விடயம் தொடரில் இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் அதிகாரிகள் செயற்பட்ட விதமானது, அதன் நிபுணத்துவத்திற்கு ஏற்புடையது அல்ல. இந்த இரத்தினக்கல்லானது, 10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானது என முந்தைய சந்தர்ப்பத்தில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் அதன் உண்மையான பெறுமதி இறுதியில் 10,700 அமெரிக்க டொலர்கள் மட்டுமே என்று தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது' என கூறியுள்ளார்.
அறிக்கையில் கையெழுத்து
மேலும், முதலில் 10 மில்லியன் அமெரிக்க டொலர் என பெறுமதியை கணிப்பிட்ட அதிகாரியே, பின்னரான காலத்தில் 10,700 அமெரிக்க டொலர் என பெறுமதியை குறைத்து கணிப்பிடு செய்து, அந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறுகின்றார்.
அத்துடன், இரத்தினக்கல் கொத்தணி தொடர்பில் கடந்த காலங்களில் அதிகம் பேசப்பட்டது. எனினும், அந்த கல் விற்பனை செய்யப்படாது, மீள கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறான கொத்தணிகள் அனைத்து இடங்களிலும் காணப்படுவதை நாம் அவதானித்திருக்கின்றோம். ஏன் இவ்வாறான பொய்யை செய்தீர்கள்? என இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் அதிகாரிகளிடம் அவர் கேள்வி எழுப்பினார்.
AFP Photo