சாட்டோகிராம் டெஸ்டில் 12வது சதம் விளாசிய ஏஞ்சலோ மேத்யூஸ்!
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் சதம் விளாசியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சாட்டோகிராமில் இன்று தொடங்கியுள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி பேட்டிங்கை தெரிவு செய்து களமிறங்கியது. அணித்தலைவர் கருணரத்னே 9 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஒஷடா பெர்னாண்டோ 36 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.
அதன் பின்னர் ஏஞ்சலோ மேத்யூஸ்-குசால் மெண்டிஸ் ஜோடி நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தது. இந்த இணை 3வது விக்கெட்டுக்கு 92 ஓட்டங்கள் சேர்த்த நிலையில், டைஜூல் இஸ்லாம் 54 ஓட்டங்களில் இருந்த குசால் மெண்டிஸை வெளியேற்றினார்.
மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய மேத்யூஸ், ஒரு சிக்ஸர் மற்றும் 12 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். இது அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் 12வது சதம் ஆகும்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 258 ஓட்டங்கள் குவித்துள்ளது. மேத்யூஸ் 114 ஓட்டங்களுடனும், சண்டிமால் 34 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
வங்கதேச அணி தரப்பில் நயீம் ஹசன் 2 விக்கெட்டுகளையும், டஜூல் மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
What a fine knock! Angelo Mathews register his 12th Test Century! ? pic.twitter.com/XQXVr0IbPO
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) May 15, 2022