துபாயில் யாழ்ப்பாண இளைஞர் படுகொலை: பகீர் பின்னணியை வெளியீட்டு தாய் முக்கிய வேண்டுகோள்
யாழ்ப்பாண இளைஞர் கமலதாஸ் நிலக்சன் துபாயில் படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில், அவரது மரணம் குறித்த பல திடுக்கிடும் தகவல்களை அவரது தாயார் வெளியிட்டுள்ளார்.
தாயின் வேண்டுகோள்
துபாயில் கடந்த ஏப்ரல் 27ம் திகதி இலங்கை யாழ்ப்பாணத்தின் சுண்டுக்குளி பகுதியை சேர்ந்த கமலதாஸ் நிலக்சன் என்ற 26 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து படுகொலை தொடர்பாக பலகட்ட விசாரணை பொலிஸார் நடத்தி வருகின்றனர், இதனால் உயிரிழந்த கமலதாஸ் நிலக்சனின் உடலை இலங்கை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மகனின் உடலை இலங்கை நாட்டிற்கு கொண்டு வர வேண்டி சம்பந்தப்பட்டோருக்கு கோரிக்கை விடுக்கும் விதமாக அவரது தாயார் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்து இருந்தார்.
இதில் அவரது மகன் கமலதாஸ் நிலக்சனின் மரணம் தொடர்பான பல தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.
துயாயில் படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண இளைஞர்
கடந்த 19/04/202ல் அவரது மூத்த மகன் கமலதாஸ் நிலக்சன் வேலைக்காக துபாய்க்கு சென்றுள்ளார், அவரை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பின்னர் அவரது இளைய மகனும் துபாய்க்கு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளார்.
6 மாதங்கள் வரை வேலை செய்தால், துபாயில் தொடர்ந்து பணிபுரிவதற்கான வேலைக்கான விசா வழங்குவதாக தெரிவித்த நிலையில், இருவரும் தொடர்ந்து வேலை பார்த்து 2 வருடங்களுக்கான வேலை வாய்ப்புக்கான விசா-வினை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் மகன் படுகொலை செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் தகவல்களை பகிர்ந்து கொண்ட அவரது தாய், கடந்த மாதம் 27ம் திகதி என்னுடைய இரண்டாவது மகன் எனக்கு வீடியோ அழைப்பு செய்து இறந்து கிடந்த எனது மூத்த மகனின் சடலத்தை காட்டினான்.
மேலும் விடுதி காவலர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அறைக்கு வந்து பார்த்த போது அண்ணன் கமலதாஸ் நெஞ்சில் கத்தியால் குத்தப்பட்டு கிடந்ததாகவும், தன்னிடம் ஏதோ சொல்ல முயன்றதாகவும் ஆனால் அதற்குள் அவர் இறந்து விட்டதாகவும் இளைய மகன் தெரிவித்தாக கமலதாஸ் தாயார் செய்தியாளர்களிடம் முதலில் தெரிவித்தார்.
பின் தொடர்ந்து பேசிய கமலதாஸ் தாயார், முதலில் துபாய் பொலிஸார் எனது இளைய மகனை கைது செய்து விசாரணை நடத்தியதாகவும், பின்னர் விடுதலை செய்யப்பட்ட தன்னுடைய இளைய மகன் அண்ணனின் அறைக்கு வந்து பார்த்த போது, அவரது மொபைல் போன் வேலைக்கான விசா, பாஸ்போர்ட் போன்றவை எல்லாம் திருடப்பட்டு இருப்பதாக தெரிவித்தான்.
இது முழுக்க முழுக்க சதி செயல் என்று குறிப்பிட்ட கமலதாஸின் தாயார், மகன் முதலில் வேலை பார்த்த ஹோட்டலில், இந்தியாவின் சென்னையை சேர்ந்த பெண் ஒருவருடன் கமலதாஸ் பழக்கம் ஏற்பட்டதாகவும், ஆனால் பின் நாட்களில் அந்த பெண்ணுக்கு பல நபர்களுடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்து தனது மகன் என்னிடம் கண்ணீர் சிந்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மகன் கமலதாஸ் உயிரிழந்த போது அவரது அறைக்கு பக்கத்தில், சென்னை சேர்ந்த அந்த பெண்ணும் மற்றொரு நபரும் இருந்துள்ளார்.
பொலிஸார் அந்த பெண்னை விசாரித்த போது, கமலாதாஸ் அவரே கத்தியால் நெஞ்சில் குத்திக்கொண்டு தன் மீது வந்து விழுந்து விட்டதாக தெரிவித்துள்ளதாகவும், மேலும் அவரது விசா மற்றும் பாஸ்போர்ட் போன்றவை தொடர்பான எந்தவொரு தகவலும் தனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார் எனவும் செய்தியாளர்களிடம் கமல்தாஸ் தாயார் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் பிரேத பரிசோதனை முடிவுகள் எதுவும் வெளியே வராமல் எதையும் உறுதிப்படுத்த முடியாது என்று பொலிஸார் இளைய மகனிடன் தெரிவித்து விட்டதாகவும் கமலதாஸ் தாயார் தெரிவித்துள்ளார்.
தற்போது என்வென்றால், என் மகனின் சடலத்தை இங்கு கொண்டுவந்து அவனுக்கு இறுதிச் சடங்கினை செய்ய உரிய தரப்பினர் முன்வந்து உதவ வேண்டும், அத்துடன் என்னுடைய இளைய மகனையும் பத்திரமாக நாட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.