கனடாவை நடுங்கவைத்துள்ள இலங்கை குடும்பத்தினர் படுகொலை... கனடா பிரதமர் வெளியிட்டுள்ள செய்தி
கனடாவில், இலங்கையர்களான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியளிப்பதாக கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.
கனடாவில் நிகழ்ந்த பயங்கரம்
கனடாவில், உள்ளூர் நேரப்படி புதன்கிழமை இரவு, தர்ஷனி பன்பரநாயக்க ஹமா வல்வே தர்ஷனி டிலந்திகா ஏகநாயக (35) மற்றும் இவரது நான்கு பிள்ளைகளான இனுக விக்ரமசிங்க (7), அஷ்வினி விக்கிரமசிங்க (4), ரினியானா விக்ரமசிங்க (2), கெல்லி விக்கிரமசிங்க (2 மாதம்) ஆகியோர் கூர்மையான ஆயுதம் ஒன்றால் கொல்லப்பட்டனர். தர்ஷினியின் கணவரான தனுஷ்க விக்கிரமசிங்க, தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமத்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், தனுஷ்க விக்கிரமசிங்க குடும்பத்துடன் தங்கியிருந்த அமரகூன்முபியயான்சேல ஜீ காமினி அமரகோன் (40) என்பவரும் தாக்குதலில் பலியாகியுள்ளார்.
இந்த கொடூர சம்பவத்தை நிகழ்த்தியவர், கனடாவில் கல்வி கற்க வந்தவரான ஃபெப்ரியோ டி ஸோய்சா (19) என்பவர் ஆவார். அவரும் இலங்கையர் என கூறப்படுகிறது. அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.
கொடூரமான வன்முறை
கனடாவில், இலங்கையர்களான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை, கொடூரமான வன்முறை என்று குறிப்பிட்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்த சம்பவம் தன்னை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த ட்ரூடோ, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டதுமே, தான் கடும் அதிர்ச்சி அடைந்ததாகவும், அது ஒரு கொடூரமான வன்முறை என்றும் கூறியதுடன், கனேடிய சமுதாயம் எப்போதும்போல இழப்பை சந்தித்துள்ள குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆதரவளிக்கும் என தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக தங்கள் பணியைச் செய்து அது குறித்த மேலதிக விவரங்களை வெளியிடுவார்கள் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒட்டாவா நகரின் மேயரான Mark Sutcliffe கூறும்போது, இது நகரின் வரலாற்றில் நிகழ்ந்த மிக அதிர்ச்சிகரமான வன்முறை சம்பவம் என்று தெரிவித்தார். பாதுகாப்பான சமூகத்தில் வாழ்வது குறித்து பெருமை கொள்கிறோம். ஆனால் இந்த சம்பவம் ஒட்டாவா நகர மக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்திவிட்டது என்று கூறியுள்ளார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |