ஒரு ரன்னில் தவறிய இரட்டை சதம்.. ஏஞ்சலோ மேத்யூஸின் கனவை கலைத்த வங்கதேச வீரர்! வீடியோ
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் ஒரு ரன்னில் இரட்டை சதத்தை தவறவிட்டார்.
இலங்கை-வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வங்கதேசத்தின் சாட்டோகிராமில் நடந்து வருகிறது. முதலில் துடுப்பாட்டம் செய்த இலங்கை அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 258 ஓட்டங்கள் சேர்த்தது.
இந்த நிலையில் இலங்கை அணி இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கியது. 114 ஓட்டங்களுடன் தனது ஆட்டத்தை தொடர்ந்த மேத்யூஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோல் சண்டிமலும் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார்.
சீரான வேகத்தில் இலங்கையின் ஸ்கோர் உயர்ந்தபோது, நயீம் அதற்கு முட்டுக்கட்டை போட்டார். சண்டிமலை 66 ஓட்டங்களில் வெளியேற்றிய அவர், அடுத்து வந்த டிக்வெல்லாவையும் போல்டாக்கினார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், நங்கூரம் நிலைத்து நின்று ஆடிய மேத்யூஸ் இரட்டை சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
https://www.youtube.com/watch?v=_4MyoHWHAe4
ஆனால், அவரது 2வது இரட்டை சத கனவை நயீம் கலைத்தார். 199 ஓட்டங்களில் இருந்த மேத்யூஸ், நயீம் பந்துவீச்சில் ஷகிப் அல் ஹசனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 397 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 19 பவுண்டரிகளுடன் இந்த ஸ்கோரை எடுத்தார். கடைசி விக்கெட்டாக அவர் அவுட் ஆக, இலங்கை அணி 397 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இலங்கை அணிக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய நயீம் 6 விக்கெட்டுகளையும், ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளையும், டைஜூல் இஸ்லாம் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.