ஐசிசி சிறந்த வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை வீரர்கள்
ஐசிசி-யின் மே மாதத்திற்கான ஆடவர் பரிந்துரை பட்டியலில் இலங்கை வீரர்களான ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் அசிதா பெர்னாண்டோ ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான போட்டியில் இலங்கை-வங்கதேச அணிகள் மோதின. இதில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது.
இந்த தொடரில் இலங்கை துடுப்பாட்ட வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் துடுப்பாட்டத்திலும், அசிதா பெர்னாண்டோ பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டனர். இந்த நிலையில் இலங்கை வீரர்கள் இருவரும், ஐசிசி-யின் மே மாதத்திற்கான ஆடவர் பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
ஏஞ்சலோ மேத்யூஸ் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 344 ஓட்டங்கள் குவித்தார். அதில் 199 மற்றும் 145 என இரண்டு சதங்களை விளாசியிருந்தார். இதன்மூலம் இலங்கை அணி மிகப்பெரிய ஸ்கோர் குவித்தது.
Photo Credit: Twitter/@ICC
அதே போல் அசிதா பெர்னாண்டோ இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 13 விக்கெட்டுகளை சாய்த்தார். கடைசி டெஸ்டில் மட்டும் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கையின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதன்மூலம் இவர்கள் இருவரும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
ஐசிசி வாக்களிப்பு அகாடமி மற்றும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் icc-cricket.com/awards இணையதளத்தில் வாக்களிக்களித்த பின்னர் சிறந்த வீரர்கள் இறுதி செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வெற்றியாளர்கள் யார் என்பதை அடுத்து வாரம் ஐசிசி அறிவிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.