பிரான்ஸ் சென்றிருந்த இலங்கை பொலிஸ் அதிகாரி காணவில்லை
பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற இலங்கை பொலிஸ் அதிகாரி ஒருவர் நாடு திரும்பாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் சென்ற இலங்கை பொலிஸ் அதிகாரி மாயம்
பிரான்சில் நடைபெற்ற சர்வதேச பொலிஸ் சங்கத்தின் (IPA) உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இலங்கை திரும்பவில்லை.
தகவல்களின்படி, மேல்மாகாண பொலிஸ் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் அந்த அதிகாரி மே மாதம் நாடு திரும்புவதற்கு திட்டமிடப்பட்டிருந்தார். ஆனால், உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பிறகு அவர் நாடு திரும்பவில்லை என தெரியவந்தது.
Representative Image
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்தப் பொலிஸ் கான்ஸ்டபிள் பிரான்சில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேல்மாகாண பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினால் சனிக்கிழமை (ஜூன் 17) குறித்த உத்தியோகத்தர் பதவியிலிருந்து விலகியதாகக் கருதப்படும் அதிகாரியாக அறிவிக்கும் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டது.
பிரித்தானியாவில்..
கடந்த வாரம், பிரித்தானியாவில் நடைபெற்ற சர்வதேச காவல்துறை சங்க மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை பொலிஸ் அதிகாரிகள் 5 பேர் நாடு திரும்பத் தவறிய செய்திகள் வெளியாயின.
ஆறு பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த ஐந்து பொலிஸ் அதிகாரிகள் இலங்கை திரும்பவில்லை எனவும், காணாமல் போனவர்கள் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னதாக, இலங்கை விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு நாடு திரும்பாதது, இலங்கை பாதுகாப்பு படை வீரர்கள் நாடு திரும்பாத பல சம்பவங்கள் கடந்த சில மாதங்களாகவே பதிவாகிவருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |