இந்திய குடிமகனாக போலி பாஸ்போர்ட் பெற்ற இலங்கைத் தமிழர்
போலி ஆவணங்கள் வைத்து பாஸ்போர்ட் பெற்ற இலங்கை தமிழரை பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைத் தமிழர்
தமிழக மாவட்டம், கரூரில் உள்ள ராயபுரம் தாலுகா, இரும்புதிப்பட்டியில் இரண்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்கள் இருக்கின்றன.
ஆனால், இந்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதால், அதிகாரிகள் கண்காணிப்பில் கரூரில் வாடகைக்கு வீடு எடுத்து அகதிகள் தங்கி வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த 1990 -ம் ஆண்டு இலங்கையிலிருந்து, தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்திற்கு தஞ்சம் தேடி வந்தவர் கணப்பிரகாசம் என்பவரின் மகன் தயானந்தன் (38). இவர், மதுரையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருந்து வந்தார்.
போலி பாஸ்போர்ட்
பின்பு, கரூரில் உள்ள அகதிகள் முகாமில் பதிவு செய்துவிட்டு, தான்தோன்றிமலையில் உள்ள அசோக் நகர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி வாழ்ந்து வந்தார்.
இதனைத்தொடர்ந்து, தான்தோன்றிமலையில் வாஞ்சிநாதன் குடியிருப்பில் வாழ்வதாக கூறி இந்திய குடிமகனாக பாஸ்போர்ட்டுக்கு தயானந்தன் விண்ணப்பித்துள்ளார். பின்னர், ஆவணங்கள் சரிபார்த்தபோது எந்தவொரு சந்தேகமும் வராதபடி சமர்ப்பித்துள்ளார்.
அதன்படி, இந்திய அரசின் பாஸ்போர்ட் கடவுசீட்டை தபால் மூலம் பெற்றுக் கொண்ட தயானந்தன் வெளிநாடு செல்லவும் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
பொலிசார் கைது
இது குறித்து பொலிசாருக்கு ரகசியமாக தகவல் கிடைத்தவுடன், தயானந்தன் வசிக்கும் வாடகை வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, இலங்கை தமிழர் என்பதை மறைத்து போலி ஆவணங்கள் மூலம் தயானந்தன் பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, தயானந்தனை கைது செய்த பொலிசார் வழக்குப்பதிவு செய்து கரூர் சிறையில் அடைத்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |