தமிழ்நாடு தேர்தல் முடிவை எப்படிப் பார்க்கிறார்கள் இலங்கை தமிழர்கள்?
திமுக ஆட்சிக்கு வந்தமை குறித்து மலையகத்தின் கண்டியைச் சேர்ந்த பச்சமுத்து விஜயகாந்தனிடம் பிபிசி தமிழ் வினவியது.
கருணாநிதியை போன்றே, ஸ்டாலின் ஆட்சியை தொடர்வார் என்று தான் எண்ணுவதாக அவர் கூறுகின்றார்.
பெரும்பாலும் ஸ்டாலின் மூலமாக, தமிழர்களுக்கு விடிவு வரும் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
எனினும், எந்தவொரு கருத்தையும், எவரையும் நம்பி கூற முடியாது எனவும் அவர் கூறுகிறார். அதேவேளை, இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு, திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சியில் ஏதேனும் நன்மை கிடைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, ஸ்டாலினின் தந்தை, மு.கருணாநிதி, உண்ணாவிரதம் இருந்து, நாடகமொன்றை அரங்கேற்றியதாகவும், அது உண்மையான அன்பு கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், ஸ்டாலின் உண்மையான தமிழ் பற்றுக் கொண்டவர் என்று தான் உணர்வதாகவும் பச்சமுத்து விஜயகாந்தன் தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்த உணர்வு தொடர்பில் பச்சமுத்து விஜயகாந்தன் கருத்து தெரிவித்தார்.
திமுக என்பது, தமிழ் மக்களின் தொப்புள் கொடி உறவை போன்றது என அவர் கூறுகின்றார். அதனால், இலங்கை தமிழர்கள் ஏதேனும் ஒரு பிரச்சினையை எதிர்நோக்கும் சந்தர்ப்பங்களில், அதற்கு திமுக குரல் கொடுக்கும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் குறித்து கொழும்பைச் சேர்ந்த விமலிடம் பிபிசி தமிழ் வினவியது.
திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆகிய இரண்டு கட்சிகளும், இலங்கை தமிழர் பிரச்சினையை தமது சுயநல அரசியலுக்காகவே பயன்படுத்தியதாக அவர் தெரிவிக்கிறார்.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழங்கில் குற்றம்சுமத்தப்பட்ட 7 பேரில் இலங்கையர்களும் அடங்குவதாக கூறிய அவர், அந்த விடயத்தையும் அரசியல் நலனுக்காகவே பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறுகிறார்.
அதேபோன்று, தமிழகத்திலுள்ள ஈழத் தமிழர்களின் அகதி முகாம்கள் இன்றும் மிக மோசமான நிலையிலேயே உள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.
கர்நாடக மாநிலத்தின் கூர்க் மாவட்டத்தில் திபெத் அகதிகளுக்காக முகாம் காணப்படுவதாகவும், தமிழ்நாட்டுடன் ஒப்பிடுகையில் திபெத் முகாம்மிக சிறப்பாக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
திபெத் அகதிகளுக்கான வாழ்வாதார உதவிகள், அடிப்படை வசதிகள், சுகாதார வசதிகள் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை அகதி முகாம்களில் அவ்வாறான சலுகைகள் கிடையாது எனவும் அவர் கூறுகிறார்.
கடந்த காலங்களில் காணப்பட்ட விதத்திலேயே, எதிர்வரும் காலத்திலும் இலங்கை தமிழர் பிரச்சினையை அரசியல் நலனுக்காக இந்த கட்சிகள் பயன்படுத்தும் என்கிறார் அவர்.
அதேபோன்று, இந்திய - இலங்கை மீனவப் பிரச்சினைக்கும், எதிர்காலத்தில் தீர்வு கிடைக்காது என்கிறார் விமல்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் கருத்து
தமிழக உடன்பிறப்புகள் தரும் முடிவை ஏற்று, அதனை எப்படி எமக்கு பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள முடியும் என்பதை மட்டுமே நாம் கணிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவிக்கிறார்.
அதைவிடுத்து, தேர்தல் காலத்திலும் சரி, முடிவுகளின் போதும் சரி, தமிழக கட்சிகளை பற்றி, தலைவர்களை பற்றி தரக்குறைவாக பண்பற்று பேசி எமது உணர்வுகளை கொட்டக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.
முதலில், அப்படி ஆத்திரப்பட நம்நாட்டு தமிழ் அரசியல் தலைமைகளும், ஏதோ பிழையே செய்யாத அதி உத்தமர்களுமல்ல என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும் என மனோ கணேசன் தெரிவிக்கிறார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பதில்
[
மலையக தமிழர்கள் தொடர்பில் திராவிட முன்னேற்ற கழகம் நன்கு, அறிந்த கட்சி என்பதனால், மலையக தமிழர்களுக்கு திமுக பாரிய சேவையை ஆற்றும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் துணைத் தலைவரும், பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவிக்கிறார்.
திமுக ஆட்சியில் இருந்த காலத்திலேயே, மலையக மக்களுக்கு 4,000 வீட்டு திட்டம் கிடைத்ததாகவும் அவர் கூறுகின்றார்.
திமுகவின் பிரதிநிதிகள் மலையகத்திற்கான பயணத்தை மேற்கொண்டு, மலையக மக்களின் நிலைமைகள் குறித்து ஆராய்ந்து, அதனூடாகவே இந்த வீட்டுத் திட்டம் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், திமுகவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் துணைத் தலைவர் செந்தில் தொண்டமான், தாம் அந்த கட்சியுடன் தொடர்ந்து பயணிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பதில் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என தாம் விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியன், பிபிசி தமிழுக்கு இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கை தமிழர்களுக்கான தீர்வை, தாம் திமுகவிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறுகின்றார்.
1980ம் ஆண்டு காலப் பகுதிகளில் தமிழக அரசியல்வாதிகளுடன் இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் நேரடி தொடர்புகளை பேணிய போதிலும், கடந்த காலங்களில் மத்திய அரசாங்கத்துடனேயே இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் தொடர்புகளை பேணி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இனிவரும் காலங்களிலும் தமிழக அரசியல்வாதிகளுடன் இணைந்து பயணிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
அத்துடன், தமிழ்நாட்டின் எந்தவொரு ஆட்சி வந்தாலும் அந்த ஆட்சியாளர்களுடன் தாம் ஒன்றிணைந்து போவதாகவும், அதேபோன்று, திமுகவுடனும் தாம் ஒன்றிணைந்து போக எதிர்பார்த்துள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியன் தெரிவிக்கிறார்