கனடாவுக்கு அனுப்புவதாக கூறி இலங்கையர்கள் கடத்தப்பட்ட வழக்கு... 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
இலங்கையர்களை கனடா அனுப்புவதாக கூறி இந்தியா வர உதவி செய்த 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையுடன் தொடர்புடைய மனிதக் கடத்தல் வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த தினகரன் அய்யா, காசி விஸ்வநாதன், ரசூல், சதாம் ஹுசைன், அப்துல் முகீது மற்றும் சாக்ரடீஸ் ஆகியோர் மீது, சர்வதேச கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி இலங்கையர்களை அழைத்துவந்து இந்தியாவில் பல்வேறு இடங்களில் இந்த கும்பல் அடைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கு, முதலில் சரியான ஆவணங்கள் இல்லாமல் இலங்கையர்கள் ஒரு லாட்ஜில் தங்கியிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் 25 இலங்கையர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட நிலையில், அடுத்தடுத்த சோதனைகளின் போது மேலும் 13 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான விசாரணையில், 2021 பிப்ரவரி முதல் ஏப்ரல் 20 வரை, 38 இலங்கையர்கள் நான்கு குழுக்களாக இந்தியாவுக்கு கடத்தப்பட்டதாக தெரியவந்தது.
கடத்தப்பட்ட 38 இலங்கையர்களும் கனடாவுக்கு அனுப்பப்படுவதாக உறுதியளிக்கப்பட்டு ஒவ்வொருவரிடமும் ஆளுக்கு 3.5 முதல் 10 லட்சம் வரை வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.