இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பாலியல் வன்கொடுமை புகாரில் அவுஸ்திரேலியாவில் கைது!
இலங்கை அணி வீரர் தனுஷ்கா குணதிலகா அவுஸ்திரேலியாவில் கைது.
பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் சிட்னி பொலிசார் நடவடிக்கை.
இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் இலங்கை அணி வீரர் தனுஷ்கா குணதிலகா அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் தனுஷ்கா குணதிலகா. இவர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்க இருந்த இலங்கை அணியில் தேர்வு செய்யப்பட்டார்.
இதற்காக அவுஸ்திரேலியா வந்த அவருக்கு தொடரின் இடையே காயம் ஏற்பட்டதன் காரணமாக தொடரில் இருந்து விலகினார்.
இருந்த போதிலும் இலங்கைக்கு திரும்பாமல் அணியுடனேயே இருந்தார். இலங்கை அணிக்கு உற்சாகமளிக்கும் வகையில் அணியுடன் தொடர்ந்து பயணித்தும், வீரர்களுக்கு உதவியாகவும் இருந்தார்.
AFP Photo
இந்த நிலையில் நேற்று சிட்னியில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வியடைந்தது. இந்தப் போட்டிக்கு பின்னர் இலங்கை அணியின் தனுஷ்கா குணதிலகா சிட்னி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிட்னி பொலிசார் கூறுகையில், இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா டேட்டிங் ஆப் மூலம் 29 வயது பெண்ணுடன் பழகி உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2-ம் தேதி ரோஸ் பே நகரில் உள்ள ஒரு ஹொட்டலில் இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது அந்த பெண்ணை குணதிலகா பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக புகார் கொடுக்கப்பட்டது.
அதன்படி அனுமதி இன்றி தன்னுடன் பாலியல் உறவு வைத்து கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் சிட்னி எங்களிடம் புகார் அளித்தார்.
இந்த புகார் தொடர்பாக குணதிலகா நேற்று கைதானார். அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இலங்கை அணி தனுஷ்கா குணதிலகா இல்லாமலேயே சொந்த நாடு திரும்யுள்ளது.
தனுஷ்கா குணதிலகா பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.