இலங்கையின் பில்லியன் டாலர்கள் வெளிநாட்டுக் கடனை சமாளிக்குமா 'ராஜபக்ஷ' அரசு?
இலங்கை அரசு வெளிநாடுகளிடம் இருந்து வாங்கியிருக்கும் கடனுதவிகளால் எதிர்காலத்தில் பலவித தாக்கம் ஏற்படலாம் என்று பல்துறை நிபுணர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.
இலங்கை உலகின் பல்வேறு நாடுகளிடமிருந்து பில்லியன் கணக்கான டாலர்கள் உதவிகளை பெற்று வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சமீபத்தில் கூறியிருந்தார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சனிக்கிழமை சந்தித்துப் பேசிய அவர், சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான உதவிகள், இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு கிடைத்துள்ளது என்றும் வங்கதேசத்திடம் இருந்து 250 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு உதவிகள் கிடைத்துள்ளதாகவும் கூறினார்.
எதிர்வரும் சித்திரை புத்தாண்டிற்கு முன்னர், சீனாவிடமிருந்து ஒரு மில்லியன் மெட்ரிக் டன் அரிசியை வாங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கையுடன் நட்புறவை பேணி வரும் நாடுகளிடமிருந்தே, இவ்வாறான உதவிகள் கிடைப்பதாக ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
இதேவேளை, பாகிஸ்தானிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டாலர் கடனை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானுக்கான அதிகாரபூர்வ விஜயமொன்றை அண்மையில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கொண்டிருந்தார். அப்போது இந்த உதவித் திட்டம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரிசி, சீமெந்து மற்றும் மருந்து பொருட்களை கொள்வனவு செய்யும் நோக்கிலேயே இந்த கடனுதவியை இலங்கை பாகிஸ்தானிடமிருந்து கோரியுள்ளது.
பாகிஸ்தானிடமிருந்து கடனை பெற்றுக்கொள்வதற்கான யோசனையை, வர்த்தக அமைச்சர், விரைவில் நிதி அமைச்சிடம் சமர்ப்பித்து, அதற்கு அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிய வருகிறது.
மேலும், இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தும் கடனை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, இதனை சர்வதேச ஊடகமொன்றிடம் தெரிவித்திருந்தார்.
இதற்கு முன்னர் சீனா உள்ளிட்ட நாடுகளிடமிருந்தும் இலங்கை அரசாங்கம் பல்வேறு உதவிகளை பெற்று வருகிறது.
பொருளாதார நிபுணரின் பார்வை
''இலங்கை பொருளாதாரம் எதிர்காலத்தில் சீரழியுமா? வளர்ச்சி அடையுமா? இல்லை இதைவிட மேலும் கடனாளியாகலாமா? கடனிலிருந்து மீண்டெழுமா? நாடு வெளிநாட்டு சக்திகளின் பலப்பரீட்சை பிரதேசமாக மாறுமா? அல்லது சமாதான பூமியாக இருக்குமா? போன்ற பல கேள்விகளை எழுப்புவதாக பொருளாதார நிபுணர் பேராசிரியர் எஸ்.விஜேசந்திரன் தெரிவிக்கின்றார்.
உலக நாடுகளிடமிருந்து தொடர்ச்சியாக கடனை பெற்று, முழுமையாக கடனாளியாக மாறிய மெக்ஸிகோவை போன்றதொரு நிலைமையை, இலங்கை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
இலங்கை அரசாங்கம் சர்வதேச நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடனை, எவ்வாறான திட்டங்களுக்கு பயன்படுத்துகின்றது என்பதே முக்கியமானது என கூறிய அவர், அது தொடர்பிலான சரியான தெளிவு கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேசத்திடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடனை உற்பத்திக்கு பயன்படுத்தினால், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து, பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள் குறைவடையும் என அவர் கூறினார்.
எனினும், வாங்கும் கடனை கொண்டு அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டால், அது நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யாது என அவர் குறிப்பிடுகின்றார்.
இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொள்ளும் கடனானது, வீதி அபிவிருத்தி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
சர்வதேச நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடனானது, அதிக வட்டிக்கு வாங்கப்படுவதுடன், அதனை மீள செலுத்தும் காலம் குறுகியது என அவர் தெரிவிக்கின்றார்.
இவ்வாறான நிலைமை தொடருமானால், எதிர்காலத்தில் இலங்கை, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பலபரீட்சை பிரதேசமாக மாறும் நிலைமை ஏற்படும் என பொருளாதார நிபுணர் பேராசிரியர் எஸ்.விஜேசந்திரன் தெரிவிக்கின்றார்.