இலங்கை நாடாளுமன்றத்தில் முதல் மாற்றுத்திறனாளி - தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல்
இலங்கை நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர, நாட்டின் முதலாவது பார்வையற்ற நாடாளுமன்ற உறுப்பினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, விசேட ஆசன ஏற்பாட்டினை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.
புதிய பாராளுமன்ற உறுப்பினரின் தனித்துவமான தேவைகளுக்கு இடமளிக்கும் வகையில் தொழில்நுட்ப மாற்றங்களையும் பாராளுமன்றம் எடுத்துரைத்து வருவதாக அவர் கூறினார்.
தேசிய மக்கள் சக்தியை (NPP) பிரதிநிதித்துவப்படுத்தும் சுகத் வசந்த டி சில்வா ஞாயிற்றுக்கிழமை (17) உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்ட NPP இன் தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டி சில்வா அரசியலுக்கு வருவதற்கு முன்னர், பார்வையற்ற மற்றும் ஊனமுற்ற சமூகங்களின் உரிமைகளுக்காகப் போராடிய ஒரு முக்கிய செயற்பாட்டாளராக இருந்தார்.
அவர் தற்போது பார்வையற்ற பட்டதாரிகள் கவுன்சிலின் (VIGC) தலைவராக பணியாற்றுகிறார், அங்கு அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்புகள் மற்றும் அணுகல் ஆகியவற்றிற்காக வாதிடுவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
டி சில்வாவின் பயணம் உறுதி கொண்டது. விபத்து காரணமாக சிறுவயதிலேயே பார்வையை இழந்த அவர், பல சவால்களை சமாளித்து கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
சமூக நல அதிகாரியாக 25 வருடங்களுக்கும் மேலான அனுபவத்துடன், சமூகத்திற்கு டி சில்வா ஆற்றிய பங்களிப்புகள் அவருக்கு பரவலான அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்துள்ளது.
மேலும் இவருடைய தனிப்பட்ட தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்வதிலும், இருக்கை ஏற்பாடுகள் மற்றும் அவரது பங்கேற்பை எளிதாக்குவதற்கான தொழில்நுட்ப சிக்கல்களையும் நிவர்த்தி செய்வதில் பல முன்னெடுப்புகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |