இலங்கை கலை நிகழ்ச்சிக்கு குஷ்பு ஏன் வரவில்லை.., அரசியல் காரணமா? கலா மாஸ்டர் விளக்கம்
இலங்கையில் நடந்த கலை நிகழ்ச்சிக்கு நடிகை குஷ்பு வராதது குறித்து கலா மாஸ்டர் விளக்கம் அளித்துள்ளார்.
இலங்கை கலை நிகழ்ச்சியில் பரபரப்பு
இலங்கை யாழ்ப்பாணத்தை அடுத்த முற்றவெளி மைதானத்தில் பின்னணி பாடகர் ஹரிஹரன் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு உள்ளிட்ட தமிழ் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நடிகை ரம்பாவின் கணவர் கட்டணமில்லை என்று கூறியதால் 1 லட்சத்திற்கும் மேல் மக்கள் கூட்டம் திரண்டது.
அப்போது, நிகழ்ச்சியில் தமன்னாவை பார்த்ததும் கட்டுக்கடங்காத கூட்டத்தினால் சில பேர் இருக்கையில் இருந்தவர்களை பின்னுக்குத் தள்ளி முந்தியடித்து மேடைக்கு அருகில் சென்றுள்ளனர். அப்போது அதனை சரிசெய்ய பொலிஸார் முயன்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கலா மாஸ்டர் கூறியது..
இந்த விவகாரம் குறித்து கலா மாஸ்டர் கூறுகையில், "கலை நிகழ்ச்சிக்கு நாங்கள் எதிர்பார்த்த கூட்டம் 45,000 பேர் தான். ஆனால், இலவசமாக பார்க்க வந்த கூட்டம் அதிகமாகிவிட்டது. எப்பவுமே ஒரு பெரிய கூட்டம் வந்தால் சில பேர் சேட்டை செய்யுறதுக்கே வருவார்கள். அப்படி வந்த சில பேரால் 15 நிமிடம் வரை பிரச்சனை வந்தது.
பிறகு அவர்களிடம் அமைதியாக ஒத்துழைப்பு தரும்படி கேட்டோம். அங்கு இருந்த பொலிஸார் அதனை சரி செய்து 20 நிமிடத்திற்குள் கட்டுப்படுத்தினர். நம்முடைய கலைஞர்களுக்கு எந்தவித தொந்தரவும் ஏற்படவில்லை. அவர்களுக்குள் இரண்டு தரப்பாக பிரிஞ்சி மோதினர்கள். பொலிஸ் நல்ல சப்போர்ட் பண்ணார்கள்" என்றார்.
மேலும் குஷ்பு குறித்து பேசிய அவர், "இந்த நிகழ்ச்சியை குஷ்பு தான் தொகுத்து வழங்க திட்டமிட்டிருந்தோம். அது தொடர்பான அறிவிப்பு வந்ததுமே இலங்கைக்கு குஷ்பு வரக்கூடாது என்று சொன்னார்கள். காங்கிரஸ் கட்சியில் குஷ்புவை எதையோ சொல்லி எதிர்த்தார்கள். அதுபற்றிய முழு விவரம் எனக்கு தெரியவில்லை.
ஆனால், அரசியல் காரணம் என்று மட்டும் உறுதியாக சொல்ல முடியும். ஆனால், இந்த விடயத்தில் தேவையில்லாத சர்ச்சைக்கு இடம் கொடுக்க வேண்டாம், நான் வரவில்லை என்று குஷ்புவெ சொன்னார். அதனால் தான் டிடியை தொகுத்து வழங்க அழைத்துச் சென்றோம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |