இலங்கை அணியின் உலகக்கோப்பை டி20 கனவு தகர்ந்தது! வெளியான முழு புள்ளிப் பட்டியல்
இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில், இலங்கை அணி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததான் மூலம் அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.
உலகக்கோப்பை டி20 தொடரின் நேற்றைய சூப்பர் 12 ஆட்டத்தில் நேற்றைய இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் இலங்கை அணி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இதன் மூலம் குரூப் 1-ல் இருந்த இலங்கை அணி 4 போட்டிகளில் மூன்று தோல்வியை சந்தித்துள்ளதால், அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி குரூப் 1 பிரிவில் முதல் அணியாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
அடுத்த இரண்டாவது இடத்தை பிடிப்பதற்கு ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இரு அணிகளுமே 3 போட்டிகளில் 2 வெற்றி 1 தோல்வி என 4 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் முன்னும் பின்னும் உள்ளன.
இந்த பிரிவில் உள்ள இலங்கையைத் தொடர்ந்து மற்ற அணிகளான மேற்கிந்திய தீவும் வங்கதேச அணியும் அரையிறுதிக்குள் நுழைவதற்கான வாய்ப்பை இழந்துள்ளன. இதே போன்று குரூப் 2 பிரிவில் பாகிஸ்தான் அணி கிட்டத்தட்ட 3 போட்டிகளில் 3 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்து, அரையிறுதி வாய்ப்பை நெருங்கியுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகளில் 2 வெற்றி ஒரு தோல்வியுடன் இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து அணி 2 போட்டிகளில் 1 வெற்றி 1 தோல்வியுடன் 3-வது இடத்திலும் உள்ளது.
இதில் இந்திய அணி 2 போட்டிகளில் 2-லும் தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழக்கும் நிலையில் உள்ளது.
இருப்பினும் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் வெற்றி, தோல்விக்கு பின்னரே குரூப் 2-வில் இரண்டாவதாக எந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பது தெரியவரும்.