இலங்கை அணி மோசமான தோல்வி! சொதப்பிய பேட்ஸ்மேன்கள்: அசால்ட்டாக வெற்றி பெற்ற வங்கதேசம்
வங்கதேச அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.
இலங்கை அணி, வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
அதன் படி நாணய சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பெடுத்தாடிய வங்கதேச அணிக்கு, தமிம் இக்பால், லிடன் தாஸ் துவக்க வீரர்களாக களமிறங்கினர். லிடன் தாய் ஓட்டம் எதுவும் எடுக்காமல், ஆட்டத்தின் 2-வது ஓவரில் டக் அவுட் ஆகி வெளியேற, அடுத்து வந்த ஷகிப் அல் ஹசன் 15 ஓட்டங்களில் பவுலியன் திரும்பினார்.
இருப்பினும், மற்றொரு துவக்க வீரரான தமிம் இக்பால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். இவருடன் சேர்ந்து முஷ்தபிகுர் ரஹும் சிறப்பான ஆட்டத்தை கொடுக்க, வங்கதேச அணியின் ரன் விகிதம் சீரான வேகத்தில் எகிறியது.
தமிம் இக்பால் 52 ஓட்டங்களிலும், முஷ்தபிகுர் ரஹும் 84 ஓட்டங்களிலும், கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய மகமதுல்லா 54 ஓட்டங்களும் குவிக்க, இறுதியாக வங்கதேச அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 257 ஓட்டங்கள் எடுத்தது.
இலங்கை அணி சார்பில், சுழற்பந்து வீச்சாளர் தனஞ்சிய டி சில்வா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 258 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு துவக்க வீரர் தனுஷ குணதிலகா 21 ஓட்டங்களிலும், குஷால் பெரேரா 30 ஓட்டங்களிலும் அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களிலும் வெளியேறியதால், இலங்கை அணி திணறியது.
அப்போது வஹிண்டு ஹசரங்க தனி ஒருவனாக போராடி இலங்கை அணியை ஒரு கெளரவ நிலைக்கு அழைத்துச் சென்றார்.
அவரும் 60 பந்தில் 74 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆக, இறுதியாக இலங்கை அணி 48.1 ஓவரில் 224 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணி 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.