கச்சத்தீவை மீட்க கோரிக்கை வைத்த விஜய் - இலங்கை அமைச்சர் கொடுத்த பதிலடி
இந்திய அரசு கச்சத்தீவை மீட்க வேண்டுமென கோரிக்கை வைத்த விஜய்க்கு இலங்கை அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார்.
கச்சத்தீவை மீட்க கோரிய விஜய்
தமிழக அரசியலில் கச்சத்தீவு விவகாரம் நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்திய அரசு கச்சத்தீவை இலங்கை அரசிடமிருந்து மீட்க வேண்டும் என நீண்ட காலமாக தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.
சமீபத்தில், மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2வது மாநில மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், "இலங்கை கடற்படை தாக்குதலால் 800 மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தடுக்க பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம். கச்சத்தீவை இந்திய பிரதமர் மோடி மீட்க வேண்டும். அது போதும்" என பேசி இருந்தார்.
இலங்கை அமைச்சர் பதிலடி
விஜய்யின் கச்சத்தீவு தொடர்பான பேச்சுக்கு, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "கச்சத்தீவு என்பது இலங்கைக்கு சொந்தமான ஒன்று. அது இன்றும், நாளையும் எப்போதும் இலங்கைக்கு சொந்தமான ஒன்று.
தமிழகத்தில் தேர்தல் வருவதால், வாக்குகளை பெற அரசியல் மேடைகளில் இது போன்று பேசுவார்கள். அவர்கள் கச்சத்தீவு குறித்து பேசுவது இது முதல்முறை இல்லை. இதற்கு முன்னர் பல அரசியல் மேடைகளில் இது போன்று பேசி உள்ளார்கள்.
எந்த ஒரு ராஜதந்திர காரணத்திற்காகவும் கச்சத்தீவை இந்தியாவிற்கு விட்டுக்கொடுக்க மாட்டோம். இந்தியா அரசு தரப்பில் இருந்து யாராவது இது குறித்து பேசினால், கவனம் செலுத்தலாம். மேடை பேச்சுக்களை பொருட்படுத்த வேண்டியதில்லை. கச்சதீவை ஒருபோதும் விட்டு தர மாட்டோம்" என கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |