இலங்கையில் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா; மகிந்த ராஜபக்ச பிரதமராக நீடிப்பு
இலங்கையில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக அனைத்து அமைச்சர்கள் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர்.
கடும் பொருளாதாரா நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த கூட்டத்தில் தங்கள் பதவிகளை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ததாக கல்வி அமைச்சர் கூறினார்.
இதனிடையே, அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியானது. நிலையில், அது பெய்யான தகவல் என்றும், தற்போது அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை என்றும், அவர் தொடர்ந்தும் பிரதமராக நீடிப்பார் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது..
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ச, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த பின்னர் ட்வீட் செய்துள்ளார்: அதில் "அனைத்து இலாகாக்களில் இருந்தும் எனது ராஜினாமாவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளேன். மக்கள் மற்றும் LKA அரசாங்கத்திற்கு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த பிரதமர்களின் முடிவு. எனது வாக்காளர்கள், எனது கட்சி மற்றும் அம்பாந்தோட்டை மக்களுக்கு நான் எனும் உறுதுணையாக இருப்பேன்." என்று பதிவிட்டுள்ளார்.
நேற்று, பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பேராதனை பல்கலைக்கழகத்திற்கு வெளியே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுப்பட்ட அவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கியை பயன்படுத்தினர்.
தலைநகர் கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர்கள் நடத்திய பேரணியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர், அதற்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வீட்டிற்கு அருகில் தாக்குதல் துப்பாக்கிகளை ஏந்திய ஒரு பெரிய குழு பொலிஸ் மற்றும் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டங்களை அடக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் சனிக்கிழமையன்று பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் யூடியூப் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடக தளங்களுக்கான அணுகலையும் முடக்கியுள்ளது. பிரதமரின் மகன் நாமல் ராஜபக்ச இதற்கு எதிராகப் பேசியதை அடுத்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தடை நீக்கப்பட்டது.
சனிக்கிழமை மாலை 6 மணிக்குத் தொடங்கிய 36 மணி நேர ஊரடங்குச் சட்டம் திங்கள் காலை 6 மணி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக குறைந்தது 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
"#GoHomeRajapaksas" மற்றும் "#GotaGoHome" இலங்கையில் ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் பல நாட்களாக ட்ரெண்டிங்கில் உள்ளன, இது 1948 -ல் ஆங்கிலேயர்களிடமிருந்து இருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து அதன் மிக வேதனையான வீழ்ச்சியில் அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான தட்டுப்பாடு, கடுமையான விலைவாசி உயர்வு மற்றும் மின்வெட்டு ஆகியவற்றுடன் போராடுகிறது.