இலங்கை ஜனாதிபதித் தேர்தல் 2024; மாற்றத்தை எதிர்நோக்கும் இளைஞர் படை
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் உள்ள 1,204 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட தேர்தல் அதிகாரி பிரசன்ன கினிகே தெரிவித்தார்.
இதேவேளை, நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் பிரச்சினைகளை எதிர்நோக்கிய போதிலும் தற்போது அனைத்து வாக்களிப்பு நிலையங்களையும் உரிய முறையில் தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கிராம சேவை உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகளில் அனைத்து கிராம சேவை உத்தியோகத்தர்களும் பங்குபற்றவுள்ளதாக அகில இலங்கை கிராம சேவை உத்தியோகத்தர் சங்கத்தின் பொது செயலாளர் ஜகத் சந்திரலால் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் இதுவரை கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் இன்றும் (20) நாளையும் (21) உள்ளூர் தபால் நிலையத்தில் அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வாக்காளர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர் வாக்குச் சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L. ரத்நாயக்க வாக்குகளை வழங்குவதற்கு உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு கட்டாயமில்லை என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான ஒத்திகை
பலத்த பொலிஸ் பாதுகாப்பில் இன்று (20) காலை 7.00 மணிக்கு வாக்குப்பெட்டி விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இன்று மதியம் 12 மணிக்குள் அந்தந்த வாக்குச் சாவடி மையங்களுக்குச் சென்றுவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, உத்தியோகத்தர்கள் வாக்களிப்பு நிலையங்களை சென்றடைந்த பின்னர் இன்று (20) ஒத்திகை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் மொத்தம் 17,140,354 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
மேலும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை(21) காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.
புதிய ஜனாதிபதியையும் மாற்றத்தையும் எதிர்நோக்கி இளைஞர் படையினர் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |