இலங்கை நெருக்கடி: ராஜபக்ஷ சகோதரர்கள் நிலை என்ன?
இலங்கையில் பல பத்தாண்டுகளில் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியை அரசாங்கம் சமாளிக்க ஏதுவாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையில் உள்ள 26 அமைச்சர்கள் மொத்தமாக தங்களுடைய பதவியில் இருந்து விலகியுள்ளனர்.
ஆனால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரரும் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார்கள்.
தற்போதைய நெருக்கடிக்கு தவறான நிர்வாகமே காரணம் என்று கூறி எதிர்கட்சிகள் மற்றும் பொதுமக்கள், ராஜபக்ஷ சகோதரர்களின் பதவி விலகலை வலியுறுத்தி வந்தனர்.
ராஜபக்ஷ குடும்பத்தை ராஜிநாமா செய்யக் கோரி வந்த பலரும் சமீபத்திய அமைச்சர்கள் ராஜிநாமா முடிவால் திருப்தியடைவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பலரும், 'அமைச்சர்களின் ராஜிநாமா நடவடிக்கை அர்த்தமற்றது' என்று கூறுகின்றனர்.
முன்னதாக, கடந்த சனிக்கிழமை நாட்டில் அரசு அறிவித்திருந்த 36 மணி நேர ஊரடங்கு அமலில் இருந்தபோதும் அதைப் பொருட்படுத்தாமல் ஞாயிற்றுக்கிழமை பல நகரங்களில் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1948இல் பிரிட்டனில் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க போராடி வருகிறது. எரிபொருள் இறக்குமதிக்கு செலுத்த பயன்படுதும் வெளிநாட்டு நாணய பற்றாக்குறையையும் அந்த நாடு சந்தித்து வருகிறது.
இதன் தாக்கம், பல நகரங்களில் அரை நாள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் மின்வெட்டு வடிவில் காணப்படுகிறது. மேலும், உணவு, மருந்துகள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறையால், பொதுமக்களின் கோபம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மஹிந்தவின் அமைச்சர்கள் தங்களுடைய பதவி விலகல் கடிதங்களை பிரதமரிடம் அளித்துள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
ராஜிநாமா செய்தவர்களில் பிரதமரின் மகன் நாமல் ராஜபக்ஷவும் அடங்குவார், "மக்கள் மற்றும் அரசாங்கத்தை பலப்படுத்தும் தீர்மானத்திற்கு" ராஜபக்ஷ சகோதரர்களின் நடவடிக்கை உதவும் என்று நம்புவதாக அவர் ட்வீட் செய்துள்ளார்.
I have informed the sec. to the President of my resignation from all portfolios with immediate effect, in hope that it may assist HE & PMs decision to establish stability for the people & the govt of #LKA. I remain committed to my voters, my party & the people of #Hambanthota.
— Namal Rajapaksa (@RajapaksaNamal) April 3, 2022
எவ்வாறாயினும், நாட்டின் நிலைமைக்கு ஜனாதிபதியும் அவரது குடும்பத்தினரும் காரணம் என்று குற்றம்சாட்டும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர், அவர் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்காக கோபமடைந்துள்ளனர்.
ஒரு ட்விட்டர் பயனர் இதை "நோய்வாய்ப்பட்ட நகைச்சுவை" என்று அழைத்தார்.
The Cabinet resigning but @PresRajapaksa remaining as prime minister and @GotabayaR as president is a sick joke
— Ranga Jayasuriya (@RangaJayasuriya) April 3, 2022
Their family cabal turned #SriLanka into their personal fiefdom, and looted it.
They should go and be held accountable for the ruin of the nation#GotaGoHome2022
மற்றொருவர் இதை "சர்வாதிகாரிகளின் நாடகம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
"அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ராஜபக்ஷ குடும்பத்தினர், அவர்களின் அரசியல் ஆதரவாளர்கள், ஊழல்வாதிகள், அவர்களின் ஊடகவியலாளர்கள் - நீங்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்," என்று மற்றொரு சமூக ஊடக பயனர் கூறியுள்ளார்.
Mahinda and Gotabaya still remains mean, they are basically putting the cancer back in and stitching it up.
— Munza Mushtaq (@munza14) April 3, 2022
There is no point in an entire cabinet resigning when these two remain. @GotabayaR and @PresRajapaksa MUST GO! #LKA #SriLanka #GoHomeGota #GoHomeRajapaksas #GoHomeMahinda
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவை மீறி ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். எதிர்கட்சி அரசியல் தலைவர்களும் இந்த போராட்டங்களில் பங்கெடுத்தனர்.
இதன் காரணமாக போராட்டங்களை தூண்டும் வகையிலும் நாட்டின் நிலைமை தொடர்பான தவறான தகவல்கள் பரப்பப்படும் முயற்சியை தடுக்கும் வகையிலும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களை இலங்கை அரசு முடக்கியது. ஆனால், அடுத்த சில மணி நேரத்திலேயே அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.
2019ஆம் ஆண்டில் பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷ, "நாட்டை ஆள ஸ்திரத்தன்மை மற்றும் ஒரு வலுவான தலைமையை வழங்குவோம்" என்று உறுதியளித்து, அப்போது இவரது தலைமைக்கு கிடைத்த புகழும் எதிர்பார்ப்பும் இப்போது தலைகீழாகிப் போனதை சமீபத்திய அதிருப்தி ஆர்ப்பாட்டங்கள் பிரதிபலிப்பதாக உள்ளன என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இலங்கை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஒரு ஆர்ப்பாட்டத்தில் நான் சந்தித்தேன். அவரும் அவரது கட்சியின் மற்ற உறுப்பினர்களும் நகரின் சுதந்திர சதுக்கத்திற்குள் நுழைய முயன்றபோது அவர்களை காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து முன்னேற விடாமல் தடுத்தனர்.
"நாட்டின் உயர்ந்த சட்டம் மக்கள் தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும், ஆர்ப்பாட்டம் செய்யவும், அமைதி வழி ஜனநாயக எதிர்ப்பை வெளிப்படுத்தும் உரிமையையும் வழங்கி அதைப் பாதுகாக்கிறது, எனவே அந்த உரிமை மீறப்படக்கூடாது," என்று சஜித் பிரேமதாசா கூறினார்,
ஊரடங்கு உத்தரவு மற்றும் சமூக ஊடக முடக்கத்துக்கான தடை சர்வாதிகாரத்தின் வெளிப்பாடு என்றும் எதேச்சதிகாரம் மற்றும் கொடூர ஆட்சியின் தொடக்கம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.