சுழன்றடிக்கும் இலங்கை பந்துவீச்சு! தடுமாறும் நியூசிலாந்து அணி: கிட்டத்தட்ட உறுதியான வெற்றி
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி மிக மோசமான நிலையில் தடுமாறி வருகிறது.
அசத்தும் இலங்கை அணி
இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்ஸின் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இலங்கை அணி 163.4 ஓவர்கள் விளையாடி 5 விக்கெட் இழப்பிற்கு 602 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் அறிவித்தது.
கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 182 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 106 ஓட்டங்களையும் குவித்து அசத்தினர்.
கமிந்து மெண்டிஸ் தன்னுடைய அபார ஆட்டத்தின் மூலம் குறைந்த இன்னிங்ஸ்களில் 1000 டெஸ்ட் ஓட்டங்களை எடுத்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
அவர், 13 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடி 4 அரைசதங்கள் மற்றும் 5 சதங்களுடன் 1,002 ஓட்டங்களை எடுத்துள்ளார்.
தடுமாறும் நியூசிலாந்து அணி
இதையடுத்து முதல் இன்னிங்ஸின் இரண்டாவது பேட்டிங்கில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 88 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதாபமான நிலைக்கு சென்றது.
இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்து வீச்சானது நியூசிலாந்து வீரர்களை குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க செய்துள்ளது.
இலங்கை அணியின் சூழல் பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூரிய இந்த போட்டியில் 6விக்கட்டுக்களை வீழ்த்தி இலங்கை அணிக்கு வலு சேர்த்துள்ளார்.
பிரபாத் ஜெயசூரிய டெஸ்ட் இன்னிங்ஸ் இதுவரை 9 முறை 5விக்கட்டுக்களை கைப்பற்றிய நிலையில், இந்த போட்டியோடு 10 முறை 5விக்கட்டுக்களை கைப்பற்றிய இலங்கை வீரராக வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.
பின் follow-on முறைப்படி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக நிஷான் பீரிஸ் வீசிய முதல் ஓவரிலேயே லாதம் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.
கான்வே மற்றும் வில்லியம்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர், கான்வே 61 ஓட்டங்களும், வில்லியம்சன் 46 ஓட்டங்களும் குவித்து அவர்களும் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.
இந்நிலையில் நியூசிலாந்து அணி 30 ஓவர்கள் முடிவில் 129 ஓட்டங்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது.
மேலும் தற்போதைய நிலவரப்படி இலங்கை அணி 385 ஓட்டங்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் காணப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |