தோனி என் சகோதரர் போன்றவர்! அவர் கொடுத்த ஊக்கம்... நெகிழும் இலங்கை அணி நட்சத்திர வீரர்
மகேந்திர சிங் தோனி தனக்கு சகோதரர் போன்றவர் என இலங்கை நட்சத்திர வீரர் திசாரா பெரேரா கூறியுள்ளார்.
திசாரா அளித்துள்ள பேட்டியில், தோனியின் கீழ் நான் விளையாடிய போது (ஐபிஎல் போட்டியில்) அவரை எனது சகோதரர் போல உணர்ந்தேன். குறிப்பாக கடந்த 2010ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் தலைமையில் நான் விளையாடியது மறக்க முடியாத ஒன்றாகும்.
அந்த வருடம் நாங்கள் கோப்பையையும் வென்றோம். அது எனது முதல் ஐபிஎல் சீசனான இருந்தபோதிலும் அதுவே எனது சிறந்த சீசனாகும். அதே போல கடந்த 2016 ஐபிஎல் தொடரில் புனே அணிக்காக நானும் தோனியும் விளையாடினோம்.
ஒரு போட்டியில் புனே 35/5 என தடுமாறியபோது நான் பேட்டிங் செய்ய களமிறங்கினேன். அப்போது தோனி எதிர்ப்புறம் இருந்தார். அந்த சமயத்தில் என்னிடம் வந்த அவர், ஹாய் டி பி, நீ ஜஸ்ட் பேட்டிங் செய் கூறிவிட்டு சென்றார். அதனால் நான் எதிர்கொண்ட முதல் பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் தடுப்பாட்டம் ஆடினேன்.
அப்போது மீண்டும் என்னருகே வந்த அவர், ஹாய் டி பி, நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என கேட்டார். அதற்கு நான் நான் வெறும் பந்தை பார்த்து விளையாடினேன் என கூறினேன்.
அதற்கு அந்த தருணத்தில் மோசமான ஸ்கோருடன் தவித்த போது அவர் கூறிய பதில் நான் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் அவர் என்னிடம் நீ பந்தை பல மைல் தொலைவிற்கு பறக்க விடுவதற்காகவே உன்னை நான் தேர்வு செய்தேன் என கூறினார்.
அதன்பின் நான் ஒவ்வொரு பந்தையும் அதிரடியாக அடிக்கத் துவங்கினேன்.
மோசமான தொடக்கத்தை பெற்று தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்த போதும் தோனி கொடுத்த ஊக்கமான வார்த்தைகள் ரன்களை குவிக்க உதவியது என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.