சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல்
வேல்ஸ் நாட்டில், தன் சகோதரியின் மகள்களைக் காப்பாற்றுவதற்காக அருவி ஒன்றிற்குள் குதித்த இலங்கைத் தமிழர் ஒருவர், பிள்ளைகளை மீட்டுக் கரை சேர்த்த நிலையில், தான் தண்ணீருக்குள் சிக்கிக்கொண்டார்.
மறுநாள் அவரது உயிரற்ற உடலைத்தான் மீட்புக் குழுவினரால் கண்டுபிடிக்கமுடிந்துள்ளது!
சகோதரி மகள்களைக் காப்பாற்றிய ஹீரோ
2023ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி, வேல்ஸ் நாட்டிலுள்ள Swanseaயில் வாழ்ந்துவந்த மோகன் என்னும் மோகனநீதன் முருகானந்தராஜா (27), தன் உறவினர்களுடன் Brecon Beacons என்னுமிடத்துக்குச் சென்றுள்ளார்.
அவரது குடும்பத்தினர் பலர் அங்குள்ள அருவியில் விளையாடிக்கொண்டிருக்க, சிறிது நேரத்தில் அவரது சகோதரி மகள்கள் இருவர் தண்ணீரில் தத்தளிக்கத் துவங்க, அவர்களைக் காப்பாற்ற தண்ணீருக்குள் இறங்கியுள்ளார் மோகன்.
துயரம் என்னவென்றால், தன் சகோதரி மகள்கள் இருவரையும் தண்ணீரில் தத்தளித்த மற்ற உறவினர்களையும் மீட்டு கரை சேர்த்த மோகன், தானே தண்ணீரில் சிக்கிக்கொண்டுள்ளார்.
மாயமான மோகனை மீட்கும் முயற்சி அன்று தோல்வியில் முடிய, மறுநாள் அவரது உயிரற்ற உடலைத்தான் மீட்டிருக்கிறார்கள் மீட்புக் குழுவினர். குடும்பத்தினரை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்திய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திவந்த அதிகாரிகள், தற்போது மோகனின் மரணம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள்.
மோகனின் மரணம் ஒரு விபத்து என கூறும் விசாரணை அதிகாரிகளின் அறிக்கை, மோகன் குடும்பம் அந்த சுற்றுலாத்தலத்துக்குச் சென்றதன் நோக்கம், சற்று நேரம் காலாற நடந்துவிட்டு இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசிப்பதுதான்.
ஆனால், அருவிக்கு வந்தபிறகு, அங்குள்ள சூழலும் வானிலையும் இனிமையானதாக இருந்ததால், அவரது குடும்பத்தினரில் பலர் தண்ணீருக்குள் இறங்க முடிவு செய்துள்ளார்கள் என்கிறது விசாரணை அதிகாரியின் அறிக்கை.
மோகன் எல்லோரிடமும் ஒரு சகோதரனைப்போல பழகக்கூடியவர் என்று கூறியுள்ள அவரது குடும்பத்தினர், அந்த அருவியின் அபாயம் குறித்து எச்சரிக்கை பலகைகள் வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |