கனடா செல்ல முயன்ற தம்பதிக்கு நேர்ந்த நிலை! 2 வயது குழந்தை இருப்பதால் இலங்கை தமிழ்பெண்ணுக்கு ஜாமீன் தந்த நீதிபதி
பாஸ்போர்ட், விசா இன்றி சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்து கனடா செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்ட இலங்கை தம்பதி வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த 23 பேர் கனடா செல்ல படகில் துாத்துக்குடி வந்தனர். பின் மதுரை கப்பலுாரில் தங்கினர்.
பாஸ்போர்ட், விசா இன்றி சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்து கனடா செல்ல முயன்றதாக கியூ பிரிவு பொலிசார் வழக்குப் பதிந்தனர்.
இதில் கைதான ஸ்டார்வின் ,அவரது மனைவி சுதா ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். அந்த மனுவில், ஸ்டார்வின் இந்திய குடிமகன். சுதா இலங்கையைச் சேர்ந்தவர். இவர்கள் மீது பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது என கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பாக அரசுத் தரப்பு வாதாடுகையில், ஸ்டார்வினுக்கு எதிராக பெங்களூரில் என்.ஐ.ஏ.,வழக்குப் பதிந்துள்ளது. அவருக்கு ஜாமீன் அனுமதிக்கக்கூடாது. சுதாவிடம் பாஸ்போர்ட் இல்லை.
சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எனில் சட்டப்படி முகாமில் வைக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டது.
பின்னர் நீதிபதி அளித்த தீர்ப்பில், என்.ஐ.ஏ., விசாரிப்பதால் ஸ்டார்வின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
சுதாவிற்கு 2 வயது குழந்தை உள்ளதால் அவருக்கு ஜாமீன் அனுமதிக்கப்படுகிறது. அவர் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.