பிரித்தானியாவின் புதிய புலம்பெயர்தல் விதிகளால் பாதிப்புக்குள்ளாகியுள்ள இலங்கையர்கள் மற்றும் இந்தியர்கள்...
பிரித்தானியாவின் புதிய புலம்பெயர்தல் விதிகளால் பாதிப்புக்குள்ளாகியுள்ளவர்களில் இலங்கையர்கள் மற்றும் இந்தியர்களும் அடங்குவர்.
விரைவில், பிரித்தானியாவில் காலவரையறையின்றி வாழ அனுமதி கிடைக்கும் என நம்பியிருந்த நிலையில், புதிய விதிகள் அந்த நிலையை மாற்றியுள்ளதால், அவர்கள் தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
புலம்பெயர்தல் விதிகளால் ஏற்பட்டுள்ள பாதிப்பு
2023ஆம் ஆண்டு, இலங்கையிலிருந்து தன் பிள்ளைகளுடன் skilled worker pathway என்னும் திட்டத்தின் கீழ் பிரித்தானியாவுக்கு வந்தார் குஷானி சுரவீரா (Kushani Suraweera).

பிரித்தானியாவில் அவர் senior care worker என்னும் பணி செய்துவந்த நிலையில், ஐந்து ஆண்டுகளில் நிரந்தரமாக பிரித்தானியாவில் வாழும் அனுமதி கிடைத்துவிடும் என அவரது குடும்பம் நம்பிக்கொண்டிருந்திருக்கிறது.
துரதிர்ஷ்டவசமாக, 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், இலங்கையிலிருந்த குஷானியின் கணவர் உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.
பிரித்தானியாவில் விசா புதுப்பிக்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுவந்ததால், அவரது இறுதிச்சடங்குக்காக இலங்கை செல்ல முடியாத நிலை ஏற்பட, குஷானியும் பிள்ளைகளும் பரிதவித்துப்போயுள்ளார்கள்.
இப்படி கடினமான சூழல்களைக் கடந்து பிரித்தானியாவில் ஒரு புதுவாழ்வை அமைத்துக்கொடுக்க முயன்றுகொண்டிருந்த நிலையில்தான், பிரித்தானிய உள்துறை அமைச்சரான ஷபானா மஹ்மூத் அந்த அதிர்ச்சியளிக்கும் அறிவிப்பை வெளியிட்டார்.
ஆம், ஐந்து ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தால், அதன் பின் காலவரையறையின்றி வாழ தகுதி பெறலாம் என இருந்த விதியை மாற்றி, இனி 10 ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தால் மட்டுமே அது சாத்தியம் என ஷபானா புது விதி ஒன்றை அறிவிக்க, குஷானி போன்றவர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்கள்.
குஷானியைப்போலவே, இந்தியர்களான வினோத் சேகரும் அவரது மனைவியான தீபா நடராஜனும், பிரித்தானியாவில் காலவரையறையின்றி வாழும் ஐந்து ஆண்டுகள் விதி நிறைவேற இன்னும் எட்டு மாதங்கள் மட்டுமே உள்ளன என்னும் சந்தோஷத்தில் இருக்க, ஷபானாவின் புதிய விதி அவர்களுக்கும் சிக்கலை உருவாக்கியுள்ளது.

தம்பதியர், குழந்தைப்பேறு சிகிச்சைக்காக காத்திருக்கும் நிலையில், புதிய விதியால், அதற்கு பல ஆண்டுகள் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளதால் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப்போயிருக்கிறார்கள் அவர்கள்.

அதேபோல, யாருடைய உதவியும் இல்லாமல், தங்கள் சேமிப்பு முழுவதையும் செலவிட்டு பிரித்தானியா வந்த ஜேம்ஸ் குணதிலகே (James Theje Gunatilake) என்னும் இலங்கையரும் விரைவில் பிரித்தானியாவில் காலவரையறையின்றி வாழமுடியும் என நம்பிக்கொண்டிருந்த நிலையில், ஷபானாவின் புதிய விதியால் அவரது குடும்பமும் கவலைக்குள்ளாகியுள்ளது.
ஆனால், இப்படி புதிய விதியால் ஏராளம் திறன் மிகுப்பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், பிரித்தானிய உள்துறை அலுவலகமோ, தாங்கள் கொண்டுவந்த கட்டுப்பாடுகளுக்காக அரசு மன்னிப்புக் கேட்கப்போவதில்லை என்கிறது!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |