இலங்கை யுத்தத்துக்கு தப்பி புதுவாழ்வைத் தேடி கனடா சென்றவர்கள் படுகுழியில் விழுந்த கதை: சீரழித்தவன் சிக்கியது எப்படி?
இலங்கையில் உள்நாட்டு யுத்தத்துக்கு தப்பி கனடாவில் சென்று புதுவாழ்வைத் துவங்கலாம் என வந்த இருவர் படுகுழியில் விழுந்த கதை இது.
ரொரன்றோவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்காக ஒரு கிராமமே அமைக்கப்பட்டுள்ளதாம்.
அங்கு எளிதில் சிக்கக்கூடியவர்களை குறிவைத்துக் காத்திருந்த ஒரு மிருகத்தில் பிடியில் சிக்கியிருக்கிறார்கள் ஸ்கந்தராஜ் நவரத்னம் மற்றும் கிருஷ்ணா கனகரத்னம் என்னும் இலங்கையர்கள் இருவரும்.
ப்ரூஸ் மெக் ஆர்தர் (65) என்னும் அந்த நபர், மொத்தம் எட்டு பேரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி தன் செடிகளுக்கு உரமாக்கியிருக்கிறார்.
அந்த எட்டு பேரில் ஸ்கந்தாவும் கிருஷ்ணராஜும் அடக்கம். புலம்பெயர்ந்து சென்று அகதி நிலை கூட கிடைக்காமல் கனடாவில் அலைந்து திரிந்த இருவரின் முழுமையான உடல்கள் கூட கிடைக்கவில்லை.
அவர்களை யாரும் தேடவும் இல்லை. இந்நிலையில், காணாமல் போன ஆண்ட்ரூ கின்ஸ்மேன் மற்றும் செலிம் எசெம் என்னும் இருவரை பொலிசார் தேடிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
கின்ஸ்மேன் தனது காலண்டரில் புரூஸ் என்ற நபரின் பெயரைக் குறிப்பிட்டிருந்திருக்கிறார். அத்துடன், அவர் காணாமல் போன அன்று, கார் ஒன்றில் ஏறும் காட்சிகள் CCTV கமெராவில் பதிவாகியிருப்பதை பொலிசார் கவனித்துள்ளனர்.
அந்த மொடல் காரை வைத்திருக்கும் புரூஸ் என்னும் பெயர் உடைய நபர்களைத் தேடும் முயற்சியில் பொலிசார் புரூஸ் மெக் ஆர்தரைக் கண்டுபிடிக்க, பொலிசார் கவனம் அவர் மீது திரும்பியுள்ளது.
ஆனால், அந்த கார் ஆர்தரின் வீட்டில் இல்லை. பழைய பொருட்கள் கடையில் அதைக் கண்டுபிடித்த பொலிசார் தடயவியல் சோதனைக்கு அந்த காரை உட்படுத்த, அதில் கின்ஸ்மேனின் DNA கிடைத்துள்ளது.
இந்த ஆதாரங்களை பொலிசார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க, நீதிபதி, இரகசியமாக ஆர்தரின் வீட்டை சோதனையிட அனுமதியளித்துள்ளார்.
அதன்படி, ஆர்தர் இல்லாதபோது அவரது வீட்டுக்குள் நுழைந்த பொலிசார், அவரது கணினியை சோதனையிட்டுள்ளார்கள்.
அதில், கின்ஸ்மேன் உயிருடன் இருக்கும் புகைப்படமும், அவர் கொல்லப்பட்டபின் எடுக்கப்பட்ட புகைப்படமும் இருந்துள்ளது.
அத்துடன், ஆர்தர் கின்ஸ்மேனை மட்டுமல்ல, எட்டு பேரை இதுவரை கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
அப்போது, ஆர்தரின் கணினியில் இருந்த எட்டு உடல்களின் புகைப்படங்களில் ஸ்கந்தா மற்றும் கிருஷ்ணராஜின் உடல்களும் அடக்கம்.
பொலிசார் ஆர்தரைக் கண்காணித்துக்கொண்டே இருக்க, மீண்டும் ஒருவரை அழைத்துக்கொண்டு தன் வீட்டுக்குள் ஆர்தர் நுழைய, உடனடியாக ஆக்ஷனில் இறக்கியுள்ளது பொலிஸ் படை. வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தபோது, அங்கே அந்த நபர் கட்டிலில் கட்டிவைக்கப்பட்டிருந்திருக்கிறார்.
அதிரடியாக ஆர்தரை கைது செய்த பொலிசார் அந்த நபரை மீட்டிருக்கிறார்கள். கொஞ்சம் தாமதித்திருந்தாலும் அவர் ஆர்தரால் கொல்லப்பட்ட ஒன்பதாவது நபராகியிருப்பார்.
ஆர்தருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 25 ஆண்டுகளுக்கு அவரால் ஜாமீனில் வரமுடியாது.
இதற்கிடையில் ஆர்தரால் கொல்லப்பட்டவர்கள், வேலையில்லாதவர்கள், அகதிகள் என எளிதில் பாதிப்புக்குள்ளாகக்கூடியவர்கள் என்பதால் ஸ்கந்தாவும் கிருஷ்ணராஜும் அவரிடம் சிக்கியதில் ஆச்சரியமில்லை எனலாம்!