சென்னை அணியில் தோனிக்கு மாற்று வீரர் இவரா? தோல்வியில் முடிந்த திட்டம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தோனிக்கு மாற்றாக வீரராக கருதப்பட்ட தமிழக வீரர் ஷாருக்கானை ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி தவறவிட்டு இருப்பது ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது.
2022ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் பெங்களுருவில் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் நடந்து முடிந்துள்ளது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் தமிழக கிரிக்கெட் வீரர் ஷாரூக்கானும் ஒருவர்.
கடந்த சில வருடங்களாகவே ஷாருக்கான் மிகப்பெரிய அளவில் ரன்களை குவித்தும், தான் சார்ந்த அணியை கடைசி பந்தில் கூட வெற்றி பெற வைத்து, நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். 200க்கும் மேல் ஸ்டைரைக் ரேட் உடைய மிடில் ஆர்டர் வீரராகவும் ஷாருக்கான் திகழ்கிறார்.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி இன்னும் ஒரு சில வருடங்களில் ஓய்வு பெறலாம் என எதிர்பார்க்கபடுவதால், தோனிக்கு மாற்றாக மற்றொரு பினிசராக ஷாருக்கானை சென்னை அணி எடுக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்த ஏலத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் ஷாருக்கானை சென்னை அணி நிர்வாகம் தங்கள் அணியில் சேர்த்துக்கொள்ள பஞ்சாப் அணியுடன் கடுமையான போட்டியில் ஈடுபட்டது.
40 லட்சம் என்ற அடிப்படை விலையில் ஏலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழக வீரர் ஷாருக்கானை இறுதியில் பஞ்சாப் அணி 9 கோடிக்கு வாங்கியுள்ளது.
தமிழக வீரர் ஷாருக்கானை சென்னை அணி இழந்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.