செய்த தவறை சுட்டி காட்டினேன்! நடந்தது இது தான்... தன் மீதான சர்ச்சை குறித்து சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி அதிரடி விளக்கம்
பிரபல நாட்டுப்புற பாடகி மதுரமல்லியின் பாடலை தனது தங்கை கலைவாணியின் பாடலாக சித்தரித்தார் என சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி மீது புகார் எழுந்த நிலையில் அதற்கு அவர் விளக்கமளித்துள்ளார்.
கிராமிய பாடகி மதுர மல்லி எழுதி பாடி யூடியூப்பில் 2 கோடி முறைக்கும் அதிகமாக பார்க்கப்பட்ட கிராமிய பாடலை, சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியின் சகோதரி கலைவாணி எழுதியதாக, ராஜலட்சுமி மேடையில் பேசுவது போலவும், செந்தில் கணேஷை நினைத்து அந்த பாடல் பாடப்பட்டது போலவும் யூடியூப்பில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டது.
இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையில் தனது கவனத்துக்கு வந்ததும் அதிர்ச்சி அடைந்த பாடகி மதுர மல்லி, தனது பாடலை ராஜலட்சுமி கச்சேரிக்காக திருடி விட்டதாக காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
மேலும் ராஜலட்சுமி தவறான கருத்தை வாபஸ் பெறவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்கிற அளவுக்கு பாடகி மதுர மல்லி கடுமையான மன உளைச்சலுடன் வீடியோ வெளியிட்டிருந்தார்.
இது குறித்து தற்போது விளக்கம் அளித்த சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, தான் தவறேதும் செய்யவில்லை என்றும் தான் மேடையில் மதுர மல்லியின் பாடல் என்று குறிப்பிட்டுத்தான் தனது தங்கையை பாட அழைத்ததாகவும், அந்த நிகழ்ச்சியை கத்தரித்து வெளியிட்ட ஆர்.ஏ. மீடியா என்ற யூடியூப் சேனல்காரர்கள் வேறொரு பாடலுக்கு சொன்ன கருத்தை தவறாக சித்தரித்து வெளியிட்டு விட்டதாக தெரிவித்தார்.
உடனடியாக அந்த யூடியூப் சேனல் நிர்வாகத்திடம் அவர்களது தவறை சுட்டிக்காட்டியதும் அந்த சர்ச்சைக்குரிய பாடல் வீடியோவை ஆர்.ஏ. மீடியா நீக்கிவிட்டதாகவும் ராஜலட்சுமி கூறியிருக்கிறார்.
தனது சகோதரி கலைவாணி சொந்தமாக எழுதி பாடியது என்று, சிவன் பாடலை குறிப்பிட்டதாக விளக்கம் அளித்த ராஜலட்சுமி, மதுரமல்லியின் பெயரை மேடையில் சொன்னதற்கு ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளார்.