களைகட்ட போகும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்! விளையாடும் வாய்ப்பை முதல் முறையாக தவறவிடும் 3 நட்சத்திர வீரர்கள்
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அதில் விளையாடும் வாய்ப்பை முதல் முறையாக தவறவிடும் 3 நட்சத்திர வீரர்கள் குறித்து தெரியவந்துள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி துவங்கி, நவம்பர் 14 வரை நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அட்டவணை இன்று பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது.
இதுவரை மொத்தம் 6 டி20 உலகக் கோப்பை சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. 2007 முதல் 2016வரை நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்ற சில நட்சத்திர வீரர்கள், இம்முறை 2021ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க முடியாத நிலை இருக்கிறது.
அவர்களில் டாப் 3 நட்சத்திர வீரர்கள் குறித்து காண்போம்.
ஷேன் வாட்சன்
2020ஆம் ஆண்டுவரை ஐபிஎலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஷேன் வாட்சன், 2016ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருடன் ஓய்வு அறிவித்துவிட்டார். அதன்பிறகு, ஐபிஎல் 13ஆவது சீசன் முடிந்த பிறகு அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்துவிட்டார். இவர் இதுவரை நடைபெற்ற அனைத்து டி20 உலகக் கோப்பையிலும் விளையாடியவர் ஆவார்.
மகேந்திர சிங் டோனி
2007ஆம் ஆண்டு முதல்முறையாக நடத்தப்பட்ட டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திய டோனி, இறுதியில் கோப்பையை பெற்றுக்கொடுத்தார்.
அடுத்து நடைபெற்ற அனைத்து டி20 உலக் கோப்பைகளிலும் பங்கேற்ற அவர், 2021ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரிலும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி திடீரென்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ராஸ் டெய்லர்
2006ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு அறிமுகமான ராஸ் டெய்லர், இதுவரை நடைபெற்ற 6 உலகக் கோப்பை தொடர்களிலும் பங்கேற்று விளையாடியிருக்கிறார்.
இதுவரை 103 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள டெய்லரின் பெயர், நியூசிலாந்து டி20 உலகக் கோப்பைக்கான அணி வீரர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.