கப்பலை அனுப்புவதாக சொல்லவில்லை... ட்ரம்பின் பேச்சுக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்த ஸ்டார்மர்
ஈரான் போர் தொடர்பில் தொடர்ந்து பிரித்தானியாவை வம்பிழுத்து வரும் டொனால்ட் ட்ரம்பால், இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவைத் தற்காத்துக்கொள்ள கெய்ர் ஸ்டார்மர் போராடி வருகிறார்.
மோசமான செயற்பாடு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று இரவு மீண்டும் பிரதமர் ஸ்டார்மர் மீதான தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஈரான் போரில் தலையிட பிரித்தானியா காட்டும் தயக்கத்தை மிக மோசமான செயற்பாடு என ட்ரம்ப் விமர்சித்துள்ளார். மேலும், தாம் கோரிக்கை வைக்காமலே இரண்டு போர் கப்பல்களை மத்திய கிழக்கில் அனுப்பி வைக்க கெய்ர் ஸ்டார்மர் தம்மிடம் உறுதி அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அப்படியான ஒரு உரையாடல் நடைபெறவில்லை என்றே பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், பிரித்தானியாவின் கப்பல்களில் ஒன்று மட்டும் தற்போது செயற்பாட்டில் உள்ளதாகவும், அது தற்போது ஆர்க்டிக் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் விளக்கமளித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை முன்னெடுக்க ஐரோப்பிய நாடுகளின் உதவியைக் கோரியிருந்த ட்ரம்ப் ஏமாற்றமடைந்துள்ள நிலையிலேயே, ஸ்டார்மர் மீது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
மட்டுமின்றி, அமெரிக்காவின் பல பில்லியன் டொலர் மதிப்பிலான கப்பல்கள் ஈரானின் கண்மூடித்தனமான தாக்குதலில், கடலில் மூழ்கும் ஆபத்து இருப்பதாலையே, ஜப்பானையும் ஐரோப்பிய நாடுகளையும் இதில் சிக்க வைக்க ட்ரம்ப் திட்டமிடுகிறார் என்ற கருத்தும் பரவி வருகிறது.

அவர்கள் தேவை இல்லை
பிப்ரவரி 28 அன்று ஈரான் மீதான போர் தொடங்கியதில் இருந்து ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. ஈரானின் அனுமதியின்றி புறப்பட்ட கப்பல்கள் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளால் தாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஈரான் போரில் பிரித்தானியா ஒருபோதும் களமிறங்காது என்றே ஸ்டார்மர் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பிரான்சும் ஜேர்மனியும் ஏற்கனவே தங்கள் நிலைப்பாடை அறிவித்துள்ளது.

இதனிடையே, தாம் பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளை அணுகியது, அமெரிக்காவிற்கு அவர்களின் சேவை தேவை என்பதற்காக அல்ல, மாறாக அவர்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ளவே என்று வெளிப்படையாகவே முரண்பாடான கருத்தை ட்ரம்ப் பதிவு செய்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |